தேர்தலுக்கு எதிரான மனுக்கள் விசாரணையின்றி நிராகரிப்பு

- உயர் நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு
- ஏழு மனுக்களில் ஒன்றேனும் சட்டவலுவை கொண்டதாக அமையவில்லை

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகவும் ஜூன் மாதம் 20ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு எடுக்காமல் உயர் நீதிமன்றம் நேற்று மாலை நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது. 

இந்த மனுக்களில் ஒன்றேனும் சட்டவலுவைக் கொண்டதாக அமையவில்லையென மனுக்களை பரிசீலித்த 05 நீதியரசர்கள் கொண்ட உயர்நீதிமன்றம் ஏகமனதாக தீர்மானித்து மனுக்களை நிராகரித்துள்ளது. 

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதை தடை செய்யுமாறும், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யுமாறும் கோரி 07 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோரடங்கிய ஐந்து நீதியரசர்கள் குழாம் நேற்று மாலை 3:15 மணிக்கு தீர்ப்பை வழங்கியது. 

கடந்த 10 நாட்களாக இந்த மனுக்கள் தொடர்பான விவாதங்கள் மனுதாரர் தரப்பிலும் பிரதிவாதிகளின் இடையீட்டு மனுக்கள் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டன. இந்த விவாதங்கள் நேற்று முன்தினம் முதலாம் திகதி நிறைவுக்கு வந்ததையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா? நிராகரிப்பதா? என்பது தொடர்பில் அறிவிப்பதாக பிரதம நீதியரசர்கள் தலைமையிலான ஐவர் கொண்ட குழு தெரிவித்திருந்தது. 

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மனுக்களாக இவை கருதப்பட்டு இதனை ஐந்து நீதியரசர்களடங்கிய குழு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்குமாறு மனுதாரர்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை பிரதம நீதியரசர் தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் குழாத்தை நியமிக்க கடந்த மே மாதம் 14 ஆம் திகதி தீர்மானித்தார். 

இந்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி பேராசிரியர் என்.ஜே அபயசேகர, ரட்ணஜீவன் ஹூல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க, சட்ட மாஅதிபர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.  

ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்தப்படுவதற்கான தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு முரணானதென தீர்மானித்து அதனை வலுவிழக்கச் செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்களால் கோரப்பட்டிருந்தது. 

கொரோனா தொற்று நாட்டில் பரவிய நிலையில் ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அண்மையில் 2072/3 இலக்கத்தை கொண்ட விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கடந்த மார்ச் மாதத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அதன் பின்னர் புதிய பாராளுமன்றுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 25இல் நடத்தப்படவிருந்தது. எனினும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக அன்றைய தினத்தில் தேர்தலை நடத்த முடியாதென தெரிவித்து தேர்தலை ஜூன் 20-இல் நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தது. 

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 03 மாதங்களுக்கிடையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுவது சட்டத்தை மீறுவதாகும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தெரிந்த மனுதாரர்கள் மே மாதம் 20ஆம் திகதி தேர்தலை நடத்தும் வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யுமாறும் கோரியிருந்தனர். 

அதேவேளை, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்கு எதிராக உரிய காலத்தில் தேர்தலை நடத்துமாறு கோரி இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

தேர்தலை ஜூன் 20 நடத்துவதற்கு ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பாராளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தலையும் வலுவிழக்கச் செய்யக் கோரும் இம் மனுவுக்கு எதிராக சட்ட மாஅதிபர் உயர்நீதிமன்றத்தில் மூன்று அடிப்படை மனுக்களை சமர்ப்பித்து சில மனுக்கள் காலம் கடந்தவையெனவும் முக்கியமான தரப்பான ஜனாதிபதியின் சார்பில் சட்ட மாஅதிபரின் பெயர் குறிப்பிடப்படாததாலும் இந்த மனுக்களை தொடர்ந்து பரிசீலிக்க முடியாதென சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.  இந்த நிலையிலேயே சகல மனுக்களையும் பரிசீலித்த நீதிபதி குழாம் நேற்றைய தினம் மனுக்களை விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

எம். ஏ. எம். நிலாம்

Wed, 06/03/2020 - 07:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை