சிறந்த உடற்தகுதியுடன் அடுத்த தொடருக்காக தயாராக வேண்டும்

- அஞ்சலோ மெதிவ்ஸ்

கொவிட்-19 வைரஸிற்கு பின்னர் இலங்கை கிரிக்கெட்டை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்லும் முகமாக, 24 வீரர்களை கொண்ட பயிற்சி முகாம் ஒன்றினை இலங்கை கிரிக்கெட் (22) ஆரம்பித்துள்ளது. அனுபவ துடுப்பாட்ட வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோருடன், குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா மற்றும் திசர பெரேரா ஆகியோர் இந்த இரண்டாவது பயிற்சி முகாமில், இணைந்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த பயிற்சி முகாம் ஆரம்பமாவது தொடர்பில் இலங்கை அணியின் அனுபவ வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் கருத்துகளை பகிர்ந்துக்கொண்டார். அவர் குறிப்பிடுகையில், “நாம் மாதங்கள் கடந்து இன்றைய தினம் அணியாக எமது பயிற்சிக்கு திரும்புகிறோம். இந்த இரண்டாவது பயிற்சி முகாமிற்காக இன்று (22) கண்டிக்கு புறப்படவுள்ளோம்.

எதிர்வரும் 10 நாட்களுக்கு இந்த பயிற்சி முகாமில் செயற்படவுள்ளோம். அணியாக பார்க்கும் போது, 24 வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்கவுள்ளோம். சிறந்த பயிற்சி முகாம் ஒன்றினை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்”.

அடுத்த தொடர் எப்போது எமக்கு கிடைக்கும் என்பது தொடர்பில் தெரியாது. ஆனால், குறித்த தொடருக்காக நாம் தயாராக இருக்க வேண்டும். தொடர் எப்போது நடைபெற்றாலும், நாம் சிறந்த உடற்தகுதியுடன் தயாராகுவதும், எதிர்ப்பார்ப்புடன் இருப்பதும் முக்கியமாகும்” என மெதிவ்ஸ் குறிப்பிட்டார்.

இலங்கை அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர்களில் மற்றுமொருவரான தினேஷ் சந்திமால், பயிற்சிக்கு திரும்புவது குறித்து கருத்து வெளியிடுகையில், “அனைவருக்கும் தெரியும் இலங்கைக்கு மாத்திரம் அல்லாமல், உலக நாடுகள் அனைத்துக்கும் கொவிட்-19 வைரஸ் பாரிய அச்சுறுத்தலை கொடுத்திருக்கிறது. எனினும், குறித்த சந்தர்ப்பத்தில், எமது உடற்தகுதியை சரியாக பேணுவதற்கு, நிபுணர்கள் அதற்கான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்ற விடயங்களை அறிவித்திருந்தனர். அதனை சரியாக நாம் கடைப்பிடித்திருந்தோம்.

இவ்வாறான நிலையில், தற்போது இலங்கை கிரிக்கெட், அணியென்ற ரீதியில் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளமை மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என சந்திமால் சுட்டிக்காட்டினார்.

Thu, 06/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை