வன்முறைக்கு மத்தியில் அமெரிக்க நகரங்களெங்கும் ஊரடங்கு உத்தரவு

பொலிஸாரின் பிடியில் கறுப்பினத்தவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்டிருக்கும் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பல பகுதிகளிலும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் பின்னர் வன்முறையாக வெடித்திருப்பதோடு, கார்கள் மற்றும் கட்டடங்கள் தீமூட்டப்பட்டுள்ளன. இதனைக் கட்டுப்படுத்த கலகமடக்கும் பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.

ஜோர்ஜ் ப்ளொயிட்டின் மரண வலியை குணப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். எனினும் குண்டர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மினியாபொலிஸ் நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பொலிஸார் பதவி நீக்கப்பட்டுள்ளதோடு 46 வயது ப்ளொயிட்டின் மரணத்திற்கு அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வெள்ளை இனத்தவரான 44 வயது டெரெக் சோவின் என்ற அந்த முன்னாள் பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அந்த பொலிஸார் கறுப்பினத்தவரின் கழுத்தை பல நிமிடங்கள் தனது காலால் இறுக்கிக் கொண்டிருக்கு வீடியோ வெளியானதை அடுத்து பதற்றம் ஏற்பட்டது. அப்போது ப்ளொயிட் தம்மால் முச்சுவிட முடியவில்லை என்று தொடச்சியாக கூறிக்கொண்டிருந்தார்.

அந்த நேரம் அங்கிருந்த மேலும் மூன்று பொலிஸாரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கறுப்பின அமெரிக்கர்கள் மீது பொலிஸார் மேற்கொள்ளும் ஒடுக்குமுறைகளின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இதற்கு முன்னர் நியூயோர்க்கில் எரிக் கானர், பெர்குசனில் மைக்கல் பிரௌன் ஆகியோரின் கொலைச் சம்பவங்களும் அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்களை தூண்டின.

இந்நிலையில் குறைந்தது 30 நகரங்களில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. காலிபோர்னிய மாநில ஆளுநர் கவின் நியுசம் அங்கு அவசர நிலையை பிறப்பித்திருப்பதோடு இராணுவத்தை அழைக்கவும் அனுமதித்துள்ளார்.

நகரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல கடைகள் கொள்ளையிடப்பட்டிருப்பதோடு தீ வைப்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

பிலடொல்பியா, அட்லாண்டா, சான் பிரான்சிஸ்கோ நகரங்களிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மினியாபொலிஸ் நகரில் ஏற்கனவே ஊரடங்கு நடப்பில் உள்ளது. வெள்ளை மாளிகைக்கு அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியதையடுத்து பாதுகாப்புக் கருதி, வெள்ளை மாளிகை முன்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Mon, 06/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை