மட்டக்களப்பில் இன்று முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்

சிறுபோக அறுவடை;

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சிறுபோகத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை அறுவடை காலத்திலேயே உடன் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் அறிவுறுத்தலில் நெல் சந்தைப்படுத்தும் சபை தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய இன்று(20) முதல் இம் மாவட்டத்தின் நெல் சந்தைப்படுத்தும் சபை களஞ்சியங்களூடாக கொள்வனவு செய்வதற்கு சபையின் தலைவர் அனுமதி வழங்கியுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா இம் மாவட்டத்தில் 2020 சிறுபோகத்தில் முற்கூட்டியே நெல் விதைப்பு நடைபெற்றதால் ஏனைய மாவட்ட விவசாயிகளுக்கு முன்னர் நெல் அறுவடை செய்யப்படுவதால் சிறுபோகத்தில் நெல் கொள்வனவை அறுவடை தொடங்கியுள்ள  காலத்திலேயே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அரசாங் கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இதனையடுத்து இம் மாவட்டத்தின் நெல் சந்தைப்படுத்தும் சபை களஞ்சியங்களூடாக கொள்வனவு செய்வதற்கு சபையின் தலைவர் அனுமதி வழங்கியுள்ளார்.

இதன்படி இம் மாவட்ட விவசாயிகள் இன்று முதல் வெளி வியாபாரிகளுக்கு நெல்லை குறைந்த விலைக்கு கொடுப்பதை தவித்து அரசாங்கத்தின் உத்தேச விலையான ஒரு புசல் நன்கு உலர்த்தப்பட்ட நெல்லை ஐம்பது ரூபாவிற்கும் போதிய உலர்வு செய்யப்படாத நெல்லை நாற்பத்து நான்கு ரூபாவிற்கும் விற்பனை செய்யலாம் எனவும் வெளி வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு நெல்லை விற்று நட்டமடைவதிலிருந்து விடுபட்டு உரிய பயனைப் பெறுமாறும் முடிந்த அளவு நெல்லை உலர்த்தி அதிகபட்ச விலையான ஒரு புசல் ஐம்பது ரூபாவிற்கு விற்பனை செய்து கொள்ள முயற்சிக்குமாறும் அரச அதிபர் கேட்டுள்ளார்.

 

மட்டக்களப்பு சுழற்சி நிருபர்

Sat, 06/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை