சிறுமியை கடத்த முற்பட்டவருக்கு வி.மறியல்

திருகோணமலையில்  சிறுமி ஒருவரை இழுத்துச் சென்ற சந்தேகநபரை இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவக்குமார் இன்று (14) உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை, நான்காம் கட்டையைச் சேர்ந்த  23 வயதுடைய சந்தேகநபருக்கே விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (13), தனது உறவினருடன் (13) திருகோணமலை  பேரூந்து நிலையத்திற்கு வந்த 08 வயது மதிக்கத்தக்க  சிறுமி ஒருவர்,  தாகமாக இருப்பதாக தனது உறவினரிடம் தெரிவித்ததை அடுத்து,  சிறுமியின் உறவினர் அங்குள்ள கடை ஒன்றில் தண்ணீர் போத்தல் வாங்குவதற்காக குறித்த சிறுமியை ஓரிடத்தில் நிற்குமாறு கூறிவிட்டு கடைக்குச் சென்றுள்ளார். குறித்த கடையில் தண்ணீர் போத்தல் வாங்கிய பின்னர் வந்து பார்த்தபோது, சிறுமி அவ்விடத்தில் இல்லாததால், பதற்றமடைந்த குறித்த சிறுமியின் உறவினர், அங்கு கடமையில் நின்ற பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.

அதனையடுத்து ஸ்தலத்திற்கு வருகை தந்த பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த சிறுமியுடன் கதைத்துக்கொண்டிருந்த சந்தேகநபர்,  சிறுமியை இழுத்துச் செல்லும் காட்சி அங்குள்ள பாதுகாப்புக் கமெராவில் பதிவாகியிருந்தது.

பின்பு  சில  மணி நேரங்களின் பின்னர், திருகோணமலை சங்கமித்தை கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிறுமி அழுதுகொண்டிருப்பதை அவதானித்த பொதுமக்கள், பொலிசாரிடம் அறிவித்ததை அடுத்து, திருகோணமலை தலைமையக பொலிசார் குறித்த சிறுமியை மீட்டுள்ளதாகவும், பொலிசார் தெரிவித்தனர்.

அதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் சந்தேக நபரைக் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, சந்தேகநபருக்கு குறித்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

(எப். முபாரக்)

Sun, 06/14/2020 - 18:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை