பெரியநீலாவணை வீட்டுத்திட்டத்தில் கழிவுநீரால் தொடரும் சுகாதார சீர்கேடு

16 வருடங்களின் பின்னர் பொலிஸாரின் தலையீட்டால் தற்காலிக தீர்வு

கல்முனை மாநகரசபையின் எல்லைக்குட்பட்ட மருதமுனை - பெரியநீலாவணை இஸ்லாமிக் றிலீப் வீட்டுத்திட்டத்தில் மலசலகூட கழிவு உட்பட வீட்டுக்கழிவு நீர் கடந்த 16 வருடகாலமாக தேங்கிக் கிடப்பதால் இங்கு வசிக்கும் மக்களும் அயலவர்களும் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக இங்கு வசிக்கும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நீண்டகாலமாக இங்கு வசிக்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த தலைமையிலான குழு கடந்த ஞாயிறு (07) குறித்த வீட்டுத்திட்டத்திற்கு விஜயம் செய்தனர். குறித்த விடயம் தொடர்பில் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடித்தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதுடன் பொலிஸாரின் உதவியுடன் குறித்த பகுதிகளும் தற்காலிகமாக சுத்தம் செய்யப்பட்டன.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் முற்றாக பாதிக்கப்பட்டு தமது உறவுகளையும் இருப்பிடங்களையும் இழந்த மருதமுனை மற்றும் பெரியநீலாவணை மக்களுக்காக 'இஸ்லாமிக் றிலீப்' வீட்டுத்திட்டத்தில் தற்போது சுமார் 108 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. வீட்டுத்திட்டத்தில் இருந்து நாளாந்தம் வெளியேறும் மலசலகூட கழிவு, குழியலறைக் கழிவு நீர், சமையலறை கழிவு நீர் என்பன முறையாக வெளியேறுவதற்கான வடிகான் வசதிகள் செய்யப்படாமையால் சுமார் 16 வருடங்களுக்கு மேலாக இங்கு வாழும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். மக்கள் பயன்படுத்தும் நடை பாதைகளில் கழிவுநீர் தேங்கிக்கிடப்பதால் டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளதுடன் துர்நாற்றமும் அதிகரித்துள்ளது. சிறுவர்கள் சறுக்கி விழுந்து விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன என இங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொடுத்து பொதுமக்களின் ஆரோக்கிய சுக வாழ்வை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

(பெரியநீலாவணை விசேட நிருபர்)

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை