Header Ads

அனைவரும் ஏற்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கம்

கல்விக்கான ஜனாதிபதி செயலணி விளக்கம்

தற்போது தயாரிக்கப்பட்டுவரும் புதிய 'தேசிய கல்விக்கொள்கை' ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கையின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி நேற்று முன்தினம் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய கல்விக் கொள்கையின் தற்போதைய நிலை பற்றி ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியது. 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்திற்கேற்ப 'அனைத்து பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்பு' என்ற கருப்பொருளின் அடிப்படையில் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. எடுக்கப்படும் தீர்மானங்கள் நாட்டுக்கும், எதிர்கால தலைமுறைக்கும் தாக்கம் செலுத்தக்கூடியதென்பதால் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் கல்விக்கொள்கை தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

முன்பள்ளிகள் முதல் ஆரம்ப, இரண்டாம் நிலை, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி வரை அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. கல்விக் கொள்கை தொடர்பான இறுதி அறிக்கை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் அதனை குறைந்தது சுமார் இரண்டு மாதங்கள் விரிவான சமூக உரையாடலுக்கு உட்படுத்துமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் மூலம் அனைத்து முன்மொழிவுகளையும் மக்களுக்கு தெரியப்படுத்தி அது தொடர்பாக கிடைக்கப்பெறும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளையும் உள்ளடக்கி இறுதி அறிக்கையை தயாரிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொவிட் 19 ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தபோதும் 'ஒன்லைன்' கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செயலணி தெரிவித்தது. ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் இருந்தபோதும் தற்போது தொழிநுட்ப பிரச்சினைகளையும் வெற்றிகொள்ள முடிந்துள்ளது.

பாடசாலைகளைப் போன்று பல்கலைக்கழக மாணவர்களும் அதிக வீதத்தில் ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டமையால் இம்முறைமையை எதிர்காலத்தில் மேம்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இந்த தரவுகளை அடிப்படையாக கொண்டு ஒன்லைன் மூலமான உயர் கல்வித்துறையை பிரபல்யப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் காலம் மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவை எதிர்பார்த்திருக்கும் காலம் இரண்டு வருடங்களுக்கும் அதிகமாகும்.

அதனை பயன்படுத்தி ஆங்கிலம் மற்றும் கணனி தொழிநுட்ப அறிவை நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.