சில இனவாத கத்துக்குட்டிகளாலேயே தேசிய கட்சிகளில் குழப்பநிலை

பிரதமர் மஹிந்தவின் அரசியல்  முதிர்ச்சியை பாராட்டிய ஹக்கீம்
எதிர்கால செயற்பாடுகளிலேயே எல்லாம் தங்கியுள்ளது என்கிறார்

சிறுபான்மைச் சமூகங்களை புறக்கணித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருப்பதன் மூலம் அவரது அரசியல் முதிர்ச்சியையே வெளிப்படுத்தியிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.  

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட தேசியக் கட்சிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறுபான்மைச் சமூகங்களை புறந்தள்ளிச் செயற்படவில்லை. ஆனால் மிகச் சமீபத்தில் கத்துக்குட்டிகளாகச் செயற்படும் இனவாதப் போக்குடையவர்கள் தேசிய அரசியல் கட்சிகளை தவறாக வழிநடத்த முற்பட்டிருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டினார்.  

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்களது சந்திப்பு கடந்த புதன்கிழமை நடைபெற்ற போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த போது, எமது இலக்கை அடைய மூவின மக்களதும் ஆதரவு அவசியமெனவும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒத்துழைப்பு மூலமே வெற்றி இலக்கை அடையமுடியுமெனவும் தெரிவித்திருந்தார்.   பிரதமரின் இந்தக் கருத்து தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.  

அண்மைக்காலமாக தேசிய அரசியல் கட்சிகள் தவறாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இதற்கு இனவாதப் போக்குடைய சில கத்துக்குட்டிகளின் செயற்பாடுகளே காரணமாக அமைந்துள்ளது. நாட்டின் அரசியல் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கின்ற போது தேசியக் கட்சிகள் சிறுபான்மைச் சமூகங்களை அரவணைத்தே பயணித்தன. இந்தக் கட்சிகளுக்குள் இனவாதச் சக்திகள் நுழைந்ததன் காரணமாக சிறுபான்மைச் சமூகங்கள் முக்கியமாக முஸ்லிம்கள் தொடர்பில் எதிர்ப்புப்போக்கு தலைதூக்கியது.  

இந்த வெறுப்பு அரசியல் காரணமாக சிறுபான்மை சமூகங்கள் தேசிய அரசியலிலிருந்து புறமொதுக்கும் நிலை உருவானது. ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் கூட ஒரு முஸ்லிம் இடம்பெறவில்லை. இனவாதிகளின் அழுத்தங்களே இதற்குப் பிரதான காரணமாகும்.  

குறுகிய காலத்துக்குள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, யதார்த்தத்தை உணர்ந்துள்ளார். அது அவரது அரசியல் முதிர்ச்சியையே காட்டுகின்றது. எனினும் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரதமர் இப்படிச்சொல்லி விட்டால் மட்டும் போதாது, சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா? என்பதை அவதானிக்க வேண்டியுள்ளது.  

எம்.ஏ.எம் நிலாம்   

Sun, 06/21/2020 - 09:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை