தேர்தல் செய்திகளை நடுநிலையாக ஊடகங்கள் அறிக்கையிட வேண்டும்

வவுனியாவில் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள்

தேர்தல் காலத்தில் செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளை அறிக்கையிடும் போது ஊடகங்கள் நடுநிலையாக செயற்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வடக்கு மாகாண தேர்தல் அரச அதிகாரிகளுடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

சுவரொட்டிகள், பதாதைகள், புகைப்படங்கள் என்பவற்றை காட்சிப்படுத்த 1981 இலக்கம் 1 பாராளுமன்ற சட்டத்திட்டங்களுக்கு அமைய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், வேட்பாளரின் தேர்தல் பிரசார அலுவலகங்களில் கட்சியின் பெயர், சின்னம், இலக்கம் என்பவற்றை காட்சிப்படுத்த முடியும்.

அத்துடன் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறும் பகுதியில் மாத்திரம் சுவரொட்டிகளை காட்சிப்படுத்த முடியும். தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்களை கட்டுப்படுத்த முடியாது. செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் போது நடுநிலையாக செயற்படுமாறு ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுப்பதற்கும் எதிர்பார்க்கின்றேன். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பிரசாரம் செய்வதற்கு சகல கட்சிகளுக்கும் காலத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, இக் கலந்துரையாடலில் வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிபர்கள், தேர்தல் திணைக்கள அதிகாரிகள், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர், பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா விசேட நிருபர்

 

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை