Header Ads

முல்லைத்தீவுக்கு புதிய மத்திய பேருந்து நிலையம் திறந்து வைப்பு

முல்லைத்தீவில் நகரஅபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நகர அபிவிரு;ததி அதிகார சபையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையம் நேற்று முன்தினம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் எஸ்.கே.திஸாநாயக்க, கிழக்கு மாகாண நகர அபிவிருத்தி திட்டமிடல் பணிப்பாளர் கெமுன பிரேமரத்தின, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் உமைமகள், முல்லைத்தீவு பிரந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் த.தயாளன், வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் எஸ்.அமிர்தலிங்கம் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மத்திய பேருந்து நிலையம், நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரால் திறந்து வைக்கப்படவுள்ளதாக நினைவுக்கல்லில் அறிவிக்கப்பட்ட போதும் அவர் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

இப் பேருந்து நிலையம் முதற்கட்டமாக 25 மில்லியன் ரூபா செலவில் கட்டட வேலைகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக 65 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நிகழ்விற்கு அரச பேருந்துக்கள் வருகைதந்துள்ள நிலையில் தனியார் பேருந்துக்களோ பேருந்து உரிமையாளர்களோ வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தின் நகர அபிவிருத்திக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு நகருக்கான பேருந்து நிலையமாக இது அமையவில்லை எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு நிருபர்

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.