டிரம்ப்பின் பதிவை கட்டுப்படுத்த பேஸ்புக் ஊழியர்கள் வலியுறுத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிடும் கருத்துகளைக் கட்டுப்படுத்துவதில் ட்விட்டர் அளவுக்கு பேஸ்புக் செயல்படவில்லை என அதன் ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

டிரம்ப்பின் பதிவுகளைக் கண்காணிப்பதில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் போதிய முனைப்புக் காட்டவில்லை என்று அவர்கள் குறைகூறினர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஊழியர்களில் கணிசமானோர் வீட்டிலிருந்து வேலை செய்வதைச் சற்று நேரம் நிறுத்தினர்.

டிரம்ப் அண்மையில் வெளியிட்ட ஒரு கருத்து இனவாதத்தையும் வன்முறையையும் தூண்டக் கூடியது எனக் கருதி, அதுபற்றிய எச்சரிக்கைக் குறிப்பைப் பதிவுக்கு அருகிலேயே வெளியிட்டது ட்விட்டர். ஆனால் பேஸ்புக் அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸக்கர்பெர்க் செய்தது தவறு என்று குறிப்பிட்ட ஊழியர்கள் சிலர் அவர் தமது மனத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினர்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை மற்றும் வன்முறை தொடர்பில் ட்ரம்ப் பதிவிட்ட ட்விட்டில், “சூறையாடல் தொடங்கும்போது துப்பாக்கிச்சூடு தொடங்குகிறது” என்ற பதிவே இந்த சர்ச்சைக்கு மூலகாரணமாகும்.

அமெரிக்க ஜனாதிபதிக்கும் ட்விட்டருக்கும் இடையில் உருவான உரசல் குறித்து ஸக்கர்பெர்க் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் டிரம்ப்பின் பதிவு மற்றவர்களை ஆழமாகப் புண்படுத்தக் கூடியது என்று குறிப்பிட்டார்.

Wed, 06/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை