அரசுக்கு வைத்த பொறியில் சிக்கி சின்னாபின்னமாகிய சஜித் அணி

எனக்கு ஒரு சட்டம்; சஜித், மனோ, செல்வத்துக்கு ஒரு சட்டமா?

அரசாங்கத்திற்கு வைத்த பொறியில் சஜித் பிரேமதாச சிக்குண்டு சின்னாபின்னமாகி உள்ளார். எனது தேர்தல் பிரசார உரையை பூதாகரமாக பெருப்பித்து அரசியலில் எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்தை வீழ்த்த முனைந்த அவரது கனவுகள் சிதறிப் போய் உள்ளன என்று கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

30 நிமிடங்களுக்கு மேலாக உரையாற்றிய எனது தேர்தல் பேச்சை 30 செக்கன்களில் வேண்டுமென்றே எடிட் செய்து ஒளிபரப்பு செய்த சில ஊடகங்கள் மூலமாக அதனை அரசாங்கத்திற்கு எதிரான கருவியாக பயன்படுத்த சஜித் பிரேமதாச தரப்பினர் முயன்றனர்.இருந்தாலும் அதில் அவர்கள் தோல்வியை கண்டுள்ளனர் என்றும்  கருணா அம்மான் தெரிவித்தார். வடக்கு கிழக்கில் அல்லது தென்னிலங்கையில் என்னை குற்றம் சுமத்த எவருக்கும் அருகதை கிடையாது. ஏனெனில் நான் புலிகளுடன் இருந்து நேரடியாக இலங்கை இராணுவத்திற்கு எதிராக போரிட்டவன். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இப்போது அரசியல் செய்யும் பலரும் புலிகளுக்கு மறைமுகமாக தமது ஆதரவை யுத்தகாலத்தில் தெரிவித்தவர்கள்.

எனவே முதலில் அவர்களைத்தான் கைது செய்ய வேண்டும். அதிலும் சஜித் பிரேமதாசவின் தந்தையார் தலைமை வகித்த ஐக்கிய தேசியக் கட்சியே புலிகளுக்கு தேவையான அளவு ஆயுதங்களை வழங்கி அவர்களை வளர்த்து விட்டது.  அதேபோன்று அரசியல் நடத்தும் மனோ கணேசன்,  செல்வம் அடைக்கலநாதன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளுக்கு ஆதரவாக பொங்குதமிழ் நிகழ்ச்சிகளிலும, ஏனைய பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளளர்.அதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

எனவே என்னை கைது செய்ய முன்னர் அவர்களையும் கைது செய்ய வேண்டும். ஆகவே இது ஒரு அரசியல் நாடகம்.  தேர்தல் மேடைகளில் பேசியதற்காக ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் இன்று தேர்தல் மேடைகளில் பேசுகின்ற  பெரும்பாலானவர்களை கைது செய்ய வேண்டும்.

எனவே இது ஓரிரு அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக சோடிக்கப்பட்ட ஒரு வடிவமே அன்றி வேறு எதுவும் இல்லை. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட நாங்கள் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பம் கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.யுத்தத்தில் இரு தரப்பிலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இருதரப்பிலும் பலரும் இறந்துள்ளனர். யுத்தம் மூலமாக இறந்த அனைவரும் செய்த தியாகங்களை நாங்கள் மதிக்க வேண்டும்.

எனவே இனிமேலும் இது போன்ற சில்லறைத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடாது நாட்டில் சமாதானத்தை  கொண்டுவர அனைவரும் முயற்சி செய்யவேண்டும் என்றும் கருணா அம்மான் தெரிவித்தார்.

Sun, 06/28/2020 - 07:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை