ஐ.நா பாதுகாப்பு சபைக்கான போட்டியில் கனடா தோல்வி

ஐ.நாவின் சக்திவாய்ந்த தீர்மானம் நிறைவேற்றும் அமைப்பான பாதுகாப்புச் சபையில் மேற்கத்தேய நாடுகளுக்கான இரண்டு இடங்களை அயர்லாந்து மற்றும் நோர்வே வென்றதை அடுத்து அந்தப் போட்டியில் கனடா தோல்வி அடைந்துள்ளது.

இந்த இடத்தை வெல்வதற்கு பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ அதிகம் செலவிட்டு பெரும் இராஜதந்திர முயற்சியை மேற்கொண்டார்.

கடந்த புதன்கிழமை பொதுச் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அங்கத்துவத்தை பெறுவதற்கு முன்றில் இரண்டு பெரும்பான்மையான 128 வாக்குகளை வெல்ல வேண்டிய நிலையில் நோர்வே 130 நாடுகளின் ஆதரவை பெற்றதோடு அயர்லாந்து 128 நாடுகளின் வாக்குகளை வென்றது. கடனாவுக்கு 108 நாடுகளே ஆதரவு அளித்திருந்தன.

இதன்படி பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவம் அற்ற இடத்திற்கான போட்டியில் கனடா தொடர்ந்து இரண்டாவது தடவையாக தோல்வியை சந்தித்துள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா போட்டி இன்றி தேர்வானதோடு மெக்சிகோவும் இரண்டு ஆண்டு காலத்திற்கான அங்கத்துவத்திற்கு தேர்வானது.

இதேவேளை ஆபிரிக்க பிராந்தியத்திற்கான ஆசனத்தை வெல்வதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கு கென்யா மற்றும் டிஜிபுட்டி நாடுகள் போட்டியிடுகின்றன. எனினும் பொதுச் சபையில் புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த இரு நாடுகளும் தேவையான மூன்றில் இரண்டு வாக்குகளை வெல்லத் தவறியதால் வாக்கெடுப்பு இரண்டாவது சுற்றுக்குச் சென்றுள்ளது.

Fri, 06/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை