இரண்டாவது அலை வைரஸ் அச்சம்: உலக பங்குச்சந்தைகள் பெரும் சரிவு

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை உருவாகக்கூடுமென்ற அச்சத்தால் உலகப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளன.

அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சியடைய அதிகக் காலம் பிடிக்குமென அமெரிக்க மத்திய வங்கி அறிவித்துள்ள நிலையில் பங்கு விலைகள் வீழ்ச்சி கண்டுள்ளன.

டவ் ஜோன்ஸ் தொழிலியல் குறியீடு கிட்டத்தட்ட 7 வீதம் வீழ்ந்தது. ஜப்பான், ஹொங்கொங், சீனா ஆகியவற்றை உள்ளடக்கிய ஆசியப் பங்குச் சந்தைகளும் வீழ்ந்தன. சிங்கப்பூரின் எஸ்.டீ.ஐ குறியீடு நேற்று முற்பகல் 11 மணி நிலவரப்படி 44 புள்ளிகள் குறைந்து 2,660 ஆக இருந்தது.

மார்ச் மாதம் கணிசமான பாதிப்புக்குள்ளான பங்குச் சந்தைகள் கடந்த சில வாரங்களாக மேம்பட்டுவந்தன. அதனால், பங்கு விலைகள் சற்றே உயர்ந்தன. ஆனால் இப்போது மீண்டும் அவை சரிந்தன. மசகு எண்ணெய் விலை அடிவாங்கியதால், எரிசக்தி, பயணத்துறைப் பங்குகள் மிக அதிக இழப்பைச் சந்தித்தன. ஐரோப்பியப் பங்குகளும் வீழ்ச்சி கண்டன.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரமான அமெரிக்கா மீண்டும் முடக்கநிலைக்குத் தள்ளப்படுவதைக் காணத் தாம் விரும்பவில்லை என, அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்டீவன் மெனுச்சின் கூறியிருந்தார்.

ஆனால் வைரஸ் தொற்றும் ஆபத்துக்கு அஞ்சி, பொதுமக்கள் தாங்களாகவே வீட்டை விட்டு வெளியேறாமல் போகக்கூடுமென்றும் அதனால் வர்த்தகங்கள் பாதிக்கப்படக்கூடுமென்றும் பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்தனர்.

Sat, 06/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை