கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருவிழா இன்று; எந்த கொண்டாட்டங்களும் நடைபெறாது

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று13 ஆம் திகதி வழமையாக நடைபெறுவதுடன் இம்முறை திருவிழாக் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறமாட்டாதென பங்குத் தந்தை அருட்திரு ஜூட் ராஜ் அடிகளார் தெரிவித்தார். அதேவேளை நாளைய தினம் முற்பகல் 11 மணிக்கு பேராயர் கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜையொன்று ஒப்புக் கொடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேற்படி திருப்பலிப் பூஜையில் பக்தர்கள் கலந்துகொள்ள  அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட அருட் பணியாளர்கள் மாத்திரமே பங்கேற்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் சுகாதாரத் துறையினரின் வழிகாட்டலுக்கிணங்க 50 பேர் மட்டுமே வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியுமென்பதால் திருப்பலிப் பூஜையில் அருட்பணியாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். எனினும் இன்று 13 ஆம் திகதி முழுநாளும் திருத்தலம் மக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும் என்றும் பக்தர்கள் திருத்தலத்திற்கு வருகை தந்து தமது பிரார்த்தனைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அதேவேளை கடந்த வருடம் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவத்தையடுத்து கடந்த வருடத்திலும் திருவிழா நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை.

இம்முறையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக வழமைபோன்று ஜூன் 3ஆம் திகதி கொடியேற்றம், அதனைத் தொடர்ந்த நவ நாள் ஆராதனைகள், 13 ஆம் திகதி திருவிழா திருப்பலி பூசைகள் மற்றும் திருச்சொரூப பவனி என எந்த நிகழ்வுகளும் நடைபெறாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Sat, 06/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை