இழந்தவற்றை இணக்க அரசியல் மூலம்தான் பெற்றுக்கொள்ள முடியும்

பொதுஜன பெரமுன வேட்பாளர் றிஸ்லி

எதிர்ப்பு அரசியல் மூலமாக இழந்தவைகள் ஏராளம், அவ்வாறு இழந்தவற்றை கூட இணக்க அரசியல் மூலமாகதான் பெற்று கொள்ள முடியும் என்பதை தமிழ் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார். 

காரைதீவில் கடற்கரை பகுதிக்கு சனி மாலை விஜயம் செய்த இவர் மக்கள் முன்னிலையில் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.  

தமிழ் உறவுகளுக்கு ஏராளமான பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் காலம் காலமாக அரசாங்கத்தை எதிர்க்கின்ற அரசியலை செய்வதன் மூலம் அவற்றுக்கான தீர்வு கிடைத்துவிடப் போவதே யில்லை. வருகின்ற பொது தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை ஆசனங்களை வென்று தனித்து ஆட்சி அமைக்கும். பெரமுனவின் ஆட்சி பத்து, பதினைந்து வருடங்களுக்குகூட தொடர்ந்து நீடிக்கும் என்பது அரசியல் அவதானிகளின் கருத்து ஆகும். இந்நிலையில் பெரமுனவை தவிர்த்து வேறு எந்த கட்சிகளுக்கு வாக்களித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீராகவேதான் மாறி விடும். 

அதே போல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து ஆட்சி அமைப்பது உறுதி என்பதால் இணக்க அரசியல் செய்யக் கூடிய உதிரி கட்சிகளுக்குகூட வாக்களிப்பது பயன் அற்றது. சிங்கள பெரும்பான்மை மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனேயே ஒன்றித்து நிற்கின்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அமோகமான வாக்குகளை அள்ளி வழங்கி கோட்டாபய ராஜபக்ஷவை மகத்தான வெற்றிக்கு இட்டு சென்றனர். வருகின்ற பொது தேர்தலிலும் பொதுஜன பெரமுனவையே ஆதரிக்க வேண்டும் என்கிற முன்முடிவோடு காணப்படுகின்றனர். எனவே பொதுஜன பெரமுனவின் மாபெரும் வெற்றியில் பங்காளிகளாக தமிழ், முஸ்லிம் மக்களும் நேரடியாக இணைந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். 

நான் உங்கள் அயலவன். எனது பாட்டன், தந்தை ஆகியோரை நீங்கள் மிக நன்றாகவே அறிவீர்கள். தமிழ் மக்களையும் அரவணைத்து அரசியல் செய்த குடும்ப பாரம்பரியத்தில் வந்தவன் என்பதில் எப்போதும் எனக்கு பெருமையும், பெருமிதமும் இருக்கின்றது. காரைதீவு மண்ணில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கான பேராதரவு வளர்ந்து வருகின்ற நிலையில் வருகின்ற பொதுத் தேர்தலில் காரைதீவு மக்களின் விருப்ப தெரிவாக என்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று உரிமையுடன் கேட்டு கொள்கின்றேன் என்றார்.   

நாவிதன்வெளி தினகரன் நிருபர்   

Mon, 06/01/2020 - 11:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை