தென்னாபிரிக்கா அணியில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று

தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை தனது நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஏழு பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சாதாரண நபரில் இருந்து நாட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதி என பாகுபாடு இன்றி கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. தற்போது விளையாட்டு வீரர்களையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. அண்மையில், பங்களாதேஷில் 3 கிரிக்கெட் வீரர்களுக்கு வைரஸ் தோற்று இருப்பது உறுதியானது. அதற்கு முன்பாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சஹீட் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் உள்ள அனைத்து கிரிக்கெட் அமைப்புகளில் உள்ள அதிகாரிகள், ஒப்பந்த வீரர்கள் என 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது. இதில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட அந்நாட்டு கிரிக்கெட் சபை மறுத்துவிட்டது.

தென்னாபிரிக்க மருத்துவ விதிகளின் படி கொரோனா பாதிப்பு நோயாளிகள் பெயர்களை வெளியிடக்கூடாது. இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் தெரிவித்து விட்டதாக தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

எதுஎவ்வாறாயினும், டேவிட் மில்லர் மற்றும் இன்னும் சில நட்சத்திர வீரர்களும் இருக்கலாமென அந்நாட்டின் உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் தென்னாபிரிக்க அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேக்கஸ் போல் கூறுகையில், சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இன்னும் சில வீரர்களின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். யார் யாருக்கு வந்துள்ளது என்ற கேள்வியை அனைவரும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்களின் பெயரை வெளியிடுவது சாத்தியமற்றது மற்றும் சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த மாதம் இறுதியில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் 3டி கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்தது.

ஆனால் தென்னாபிரிக்காவின் விளையாட்டு திணைக்களம் மற்றும் அந்நாட்டு அரசு அனுமதி அளிக்காததால் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Thu, 06/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை