மக்கள் மத்தியில் அரசாங்கம் மீதான வெறுப்பை கக்கும் அநாகரிக செயல்

மு.கா தலைவரின் உரைக்கு அலிசப்ரி கண்டனம்

இன்றைய தேர்தல் காலத்தில் அரசாங்கம், ஜனாதிபதி மீதும் வெறுப்பை கக்குகின்ற அநாகரிக செயலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி கடும் கண்டனத்தை தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் நிகழ்த்திய உரையின் போது, ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்காதவர்களை அடக்கி ஆளும் இறுமாப்போடு ஆளும் தரப்பு ஈடுபட்டு வருவதாகக் கூறியிருப்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.   ரவூப் ஹக்கீம் போன்ற முதிர்ச்சியான அரசியல் தலைவர்கள் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வையூட்டும் விதத்தில் பேசுவது, அநாகரிகமான செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதற்காக ஜனாதிபதி முஸ்லிம்களை பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டாரா? எனக் கேட்கவிரும்புகின்றேன்.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவிக்கு வந்த பின்னர் எந்தச் சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களையோ, ஏனைய சிறுபான்மை மக்களையோ பழிவாங்கும் மனப்பாங்கில் செயற்படவில்லை. எதிர்வரும் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஆதரவையே கோரி வருகின்றார். எந்தக் குற்றமும் செய்யாத ஒரு தலைவரைப் பார்த்து குற்றவாளியாகக்காட்டும் ஒரு அநாகரிகமான அரசியலையே இவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.  

கொவிட் 19 தொற்று தாக்கத்தில் அனைவரையும் வேறுபாடு காட்டாமல் பாதுகாப்பதில் செயற்பட்டவர் ஜனாதிபதி. இக்காலகட்டத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன,மத பேதமின்றி அனைவருக்கும் ஐயாயிரம் ரூபா உதவித் தொகையை பெற்றுக்கொடுக்க  நடவடிக்கை எடுத்தது குற்றமா? எனக் கேட்டுவிரும்புகின்றேன்.  

தேர்தல் மேடைகளில் வெறுப்பு பிரசாரங்களைச் செய்து மக்களை தவறான வழியில் இட்டுச் செல்லும் மோசமான அரசியல் கலாசாரத்தையே ஹக்கீம் போன்றவர்கள் மேடையேற்றி வருகின்றனர். இவர்களின் பொய்ப் பிரசாரங்களை ஏற்றுக் கொள்வதற்கு இனிமேலும் மக்கள் தயாராக இல்லை என்பதை வலியுறுத்திக் கூறவிரும்புகின்றேன்.எந்தவொரு சமூகத்தையும் அடக்கியாளும் எண்ணத்துடன் ஜனாதிபதியோ, அரசாங்கமோ செயற்படவில்லையென அலி சப்றி தெரிவித்தார்.  

எம்.ஏ.எம். நிலாம்  

Sun, 06/28/2020 - 08:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை