Header Ads

இனவாதத்திற்கு எதிராக அமெரிக்கா எங்கும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நீடிப்பு

உலகின் பல நகரங்களிலும் போராட்டம்

அமெரிக்காவில் பொலிஸ் பிடியில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளொயிட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 12 ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் நீடித்ததோடு இனவாதம் மற்றும் பொலிஸ் அடக்குமுறைக்கு எதிராக நாடெங்கும் அமைதியான பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

வொசிங்டன் டிசியில் இதுவரை இல்லாத பாரிய ஆர்ப்பட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த சனிக்கிழமை பேரணி நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை நெருங்குவதை பாதுகாப்பு படையினர் தடுத்தனர்.

நியூயோர்க், சிக்காகோ, லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களிலும் பெரும் திரளானவர்கள் கூடினர்.

இதேவேளை இது தொடர்பான இனவாத எதிர்ப்புப் போராட்டங்கள் உலகின் பல இடங்களிலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தொற்றைத் தவிர்க்க, பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் போராடி வருகின்றனர்.

லண்டன், ஹெம்பர்க், பெர்லின், சிட்னி, டோக்கியோ, சோல், பாங்கொக் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டனர்.

மின்னியாபொலிஸ் நகரில் கடந்த மே 25 ஆம் திகதி நிராயுதபாணியாக இருந்த பிளொயிட்டின் கழுத்தை வெள்ளையின பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது முழங்காலால் நெரித்த நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்களை தூண்டியது.

இதில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் டெரெக் சோவின் என்ற பொலிஸார் தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்த ​ேமலும் மூன்று பொலிஸார் பதவி நீக்கப்பட்டு கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இனவாதத்திற்கு எதிரான பதாகைகளுடன் வொசிங்டன் டிசியில் கபிடோல் கட்டடம், லிங்கன் நினைவகத்தில் வெள்ளை மாளிகைக்கு அருகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியாக ஒன்று திரண்டனர்.

இந்த மக்களை வரவேற்ற மேயர் முரியல் போசர், இந்தக் கூட்டம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு செய்தி ஒன்றை வழங்கியுள்ளது என்றார். கடந்த வாரம் இங்குள்ள தேவாலயத்திற்கு ஜனாதிபதியின் வருகையை ஒட்டி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க மத்திய சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நகரில் இருக்கும் மத்திய சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினரை வாபஸ் பெறும்படியும் கோட்டுக்கொண்ட போசர், அவர்கள் நகரில் நிலைநிறுத்தப்படுவது தேவையில்லாதது என்றும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு இனங்கள், நிறங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர். பலர் குடும்பம் குடும்பமாக, குழந்தைகளோடு வந்திருந்தனர். இந்தப் போராட்டத்தில் உறுதியான மன எழுச்சி நிலவியதாகவும் இசைக்கருவிகள் இசைக்கப்பட்டதாகவும் ‘நீதி இல்லையேல் அமைதி இல்லை’என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகவும் செய்தியாளர்கள் விபரித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களால் ஆரம்பத்தில் ஏற்பட்ட பதற்ற சூழல் காரணமாக பல நகரங்களிலும் போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கைது நடவடிக்கைகள் குறைந்துள்ளன.

பொலிஸ் அடக்குமுறை தொடக்கம் சுகாதாரத்துறை வரை தொடர்ந்து இடம்பெற்றுவரும் திட்டமிட்ட இனவாத மற்றும் பாகுபாட்டை கையாள்வதற்கு அதிகாரிகளை நியமிப்பது குறித்து சமூகதளங்கள் மற்றும் வீதிகளில் திரண்டிருக்கும் ஆரப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

அமெரிக்காவில் வெள்ளையினத்தவர் கைது செய்யப்படுவது ஐந்து மடங்கு அதிகம் என்பதோடு போதைப் பொருள் பயன்படுத்துவதில் இரு பிரிவினரும் சம வீதத்தில் இருந்தபோதும் கறுப்பினத்தவர் மீதான தண்டனைகள் ஆறு மடங்கு அதிகம் என்று நிற மக்களின் முன்னேற்றத்திற்கான தேசிய சங்கம் என்ற அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

வெள்ளையினத் தாய்மார்களை விடவும் கறுப்பினத் தாய்மார் குழந்தை பிறப்பின்போதான உயிரிழப்பு வீதம் இரண்டு மடங்காக இருப்பதாக தேசிய சுகாதார தரவுகள் காட்டுகின்றன. வீட்டுத் திட்டங்கள், பாடசாலை அமைப்பு மற்றும் ஏனைய பொதுத் துறைகளில் அரசின் பாகுபாடு தொடர்ந்து நீடிப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் தொடர்பில் தொடர்ந்தும் அடிமை மரபு நீடிப்பதாக 10 இல் எட்டிற்கும் அதிகமான கறுப்பினத்தவர் நம்புகின்றனர் என்று பியு ஆராய்ச்சி நிறுவனம் 2019 ஆம் ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் பாதிப்பேர் அமெரிக்காவில் இனச் சமத்துவம் ஏற்படுவது சாத்தியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

Mon, 06/08/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.