மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகம் நானே

கட்சியின் யாப்புக்கமைய நான் நீக்கப்படவில்லை

மலையக மக்கள் முன்னணியின் யாப்பின் சரத்துக்களுக்கமைய நான் நீக்கப்படவில்லை. நானே பிரதி செயலாளர் நாயகமாக இன்றும் இருக்கிறேன் என மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் நுவரெலியா மாவட்ட சுயேச்சை வேட்பாளருமான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மலையக மக்கள் முன்னணியிலிருந்து நான் நீக்கப்பட்டதாக ஊடகத்தின் வாயிலாகவே அறிந்தேன். இதற்கு நான் ஒரு சட்டத்தரணியாக பதிலளிப்பதே  பொறுத்தமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நான் பதவியிலிருக்கும் போதே இன்னொருவரை நியமித்ததற்கு எதிராக என்னால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். புரட்சித் தலைவன் அமரர் சந்திரசேகரனின் மகளாக சட்டம் படித்த ஒரு சட்டத்தரணியாக இவ்வாறான ஊடக அறிக்கைகள் ஒருபோதும் என்னை பின்னடைய செய்யவோ அல்லது என்னுடைய அரசியல் பயணத்தை தடுக்கவோ இயலாது.

எனது தந்தை அமரர் சந்திரசேகரன் எவ்வாறு 1994ஆம் ஆண்டு தனித்து களமிறங்கினாரோ அதே போன்று எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் நான் தனித்து களமிறங்குவதும் வெல்வதும் உறுதி.

இம்முறை தேர்தலில் வெற்றி பெற்று அமரர் சந்திரசேகரன் வழிவந்த மலையக மக்கள் முன்னணி ஆதரவாளர்களுக்கும் மலையக மக்களுக்காகவும் எனது குரல் என்றென்றும் ஒலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

தலவாக்கலை குறூப் நிருபர்

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை