நெருக்கடியான நேரத்தில் இங்கிலாந்துக்கு உதவி

மேற்கிந்திய தீவு அணிக்கு நன்றி தெரிவித்த முன்னாள் தலைவர்

மேற்கிந்திய தீவு அணி இக்கட்டான நிலையில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்ய சம்மதம் தெரிவித்ததற்காக முன்னாள் தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 3 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. மேற்கிந்திய தீவு அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்தை வந்தடைந்தது.

இங்கிலாந்து- மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-ம் திகதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. ஜூலை 28-ம் திகதியுடன் இந்த டெஸ்ட் தொடர் முடிகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட வரும் மேற்கிந்திய தீவு அணியை இங்கிலாந்து முன்னாள் தலைவர் டேவிட் கோவர் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் ஒரே மாதிரியான நெருக்கடி நிலை உள்ளது. இந்த நேரத்தில் மேற்கிந்திய தீவு அணி இங்கிலாந்து வந்து டெஸ்டில் ஆடுவது சிறப்பானது. இது அவர்களது விளையாட்டு உத்வேகத்தை காட்டுகிறது. இதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.

மேற்கிந்திய தீவு அணி இங்கிலாந்தில் விளையாடுவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்து இருக்கிறது. கொரோனா நோய் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டதால் பல்வேறு நாடுகளுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து - மேற்கிந்திய தீவு தொடருக்கு பிறகு மற்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கலாம்.

 

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை