உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அங்கவீனமானோருக்கு சிகிச்சை

அரசு செலவிடுமென பேராயருக்கு பவித்ரா விளக்கம்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் அங்கவீனமடைந்துள்ளவர்கள் மற்றும் படுகாயங்களுக்குள்ளானவர்களை அரசாங்கத்தின் செலவில் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆஸ்பத்திரியில்  தொடர் சிகிச்சைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அது தொடர்பில் நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பேராயரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் அரசாங்கத்தின் மேற்படி தீர்மானத்துக்காக பேராயர் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

படுகாயங்களுக்கு உள்ளானவர்களில் 139 பேர் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 39 பேர் நீண்டகால விஷேட மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களென டாக்டர்கள் சிபாரிசு செய்துள்ளனர்.

அவர்களுக்கு விசேட சிகிச்சை நடைமுறையொன்றை மேற்கொள்ள வேண்டுமென விசேட மருத்துவ நிபுணர்களும் டாக்டர்களும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் அறிவித்துள்ளனர்.

அது தொடர்பில் அண்மையில் தன்னை சந்திக்க வந்த சுகாதார அமைச்சரிடம் பேராயர் கலந்துரையாடியுள்ளார்.

அது தொடர்பில் உடனடியாகவே செயலில் இறங்கியுள்ள சுகாதார அமைச்சர் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆஸ்பத்திரியின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட விசேட மருத்துவர் குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் அமைச்சரின் கண்காணிப்பின் கீழ் மேற்படி 39 பேருக்கும் விசேட சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்படி சிகிச்சைகளுக்கான அனைத்து செலவுகளையும் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் சுகாதார அபிவிருத்தி நிதியின் ஊடாக செலவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அறிவிக்கும் வகையில் நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி பேராயரை பேராயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 06/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை