பிபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் திகதிகள் அறிவிப்பு

ஆசிய கால்பந்து சம்மேளனம் , சர்வதேச கால்பந்து சம்மேளனத்துடன் மேற்கொண்ட ஆலோசனை அடிப்படையில் 2022ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் தொடரின் இரண்டாம் சுற்றில் எஞ்சியுள்ள போட்டிகள் மற்றும் 2023ஆம் ஆண்டு ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் என்பவற்றுக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தகுதிகாண் போட்டிகள் ஏற்கனவே இந்த ஆண்டின் மார்ச் மாதத்திலும், ஜூன் மாதத்திலும் நடைபெறவிருந்தன. ஆனால், உலகில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இப்போட்டிகள் அனைத்தினையும் பிற்போட வைத்தது.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய திகதிகளின் அடிப்படையில் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் இரண்டாம் சுற்றுக்கான 7, 8ஆம் நாட்களுக்கான போட்டிகள் முறையே எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம், 13ஆம் திகதிகளில் நடைபெறவிருப்பதோடு, 9, 10ஆம் நாட்களுக்கான போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம், 17ஆம் திகதிகளில் இடம்பெறவிருக்கின்றன.

புதிய திகதிகள் அடிப்படையில் 2022ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கிண்ணத்தின் தகுதிகாண் தொடருக்கான இரண்டாம் சுற்றுப் போட்டிகள் மற்றும் 2023ஆம் ஆண்டு ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத்திற்கான தகுதிகாண் தொடரின் இறுதிச் சுற்றுக்கான போட்டிகளும் எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவுக்கு வருவதனை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. இதன், பின்னர், 2022ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் மூன்றாம் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நடைபெறும் என சர்வதேச கால்பந்து சம்மேளன நாட்காட்டி குறிப்பிடுகின்றது.

இலங்கை கால்பந்து அணியும் இந்தப் போட்டிகளில் விளையாடுவது கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டிருந்தது. எனினும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளின் அடிப்படையில் பின்வரும் நாட்களில் இலங்கை கால்பந்து அணி கால்பந்து உலகக் கிண்ணத்தின் இரண்டாம் சுற்றில் விளையாடவிருக்கின்றது.

இலங்கை எதிர் வட கொரியா – ஒக்டோபர் 08, 2020 – வடகொரியா.

இலங்கை எதிர் தென் கொரியா – ஒக்டோபர் 13, 2020 – இலங்கை.

இலங்கை எதிர் லெபனான் – நவம்பர் 12, 2020 – லெபனான்.

விடயங்கள் இவ்வாறு இருக்க, கொரோனா வைரஸ் ஆபத்து இன்னும் முழுயைமாக குறையாத காரணத்தினால் கால்பந்து உலகக் கிண்ணத்தின் தகுதிகாண் போட்டிகள் நடைபெறும் போது வீரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய ஆசிய கால்பந்து சம்மேளனம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Mon, 06/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை