மேற்குக் கரை இணைப்புக்கு எதிராக இஸ்ரேலில் போராட்டம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மக்கள் மேற்குக் கரை ஆக்கிரமிப்புக்கு எதிராக கோசங்களையும் எழுப்பினர். அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தில், மேற்குக் கரையில் மூலோபாயமிக்க பகுதிகள் மற்றும் யூதக் குடியேற்றங்களை இஸ்ரேலுடன் இணைப்பதற்கு பச்சைக்கொடி காட்டியிருந்தார்.

இதனை முன்னெடுப்பது குறித்த தீர்மானம் ஒன்றை இஸ்ரேலிய அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தில் வரும் ஜூலை முதலாம் திகதி சமர்ப்பிப்பதற்கு இஸ்ரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.

இது மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உள்ளது.

டொனால்ட் டிரம்பின் அமைதித் திட்டத்தை பலஸ்தீனர்கள் முழுமையாக நிராகரித்துள்ளனர்.

Mon, 06/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை