கொரோனா தொற்று உயிரிழப்பு அரை மில்லியனைத் தாண்டியது

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டியுள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கினர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பதிவாகியுள்ளனர்.

இதன்படி உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 500,390 ஆக உயர்ந்திருப்பதோடு 10,099,576 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 125,747 பேரும், பிரேசிலில் 57,622 பேரும் பிரிட்டனில் 43,550 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தேசிய நிர்வாகங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் தரவுகளை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை உண்மையான பாதிப்பு எண்ணிக்கையின் ஒரு பகுதியாக இருக்கக் கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். பல நாடுகளிலும் தீவிரமான சம்பவங்கள் மாத்திரமே சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுற்ற 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் மேலும் 288 பேர் கொவிட்-19 பாதிப்பினால் உயிரிழந்திருப்பதை ஜோன்ஸ் ஹொப்கின்ஸன் பல்கலைக்கழக தரவுகள் காட்டுகின்றன. அந்நாட்டில் நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து தீவிரமாக இருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த போராடி வருகிறது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

லொஸ் ஏஞ்சல்சில் மதுபானக் கடைகள் மற்றும் மேலும் ஆறு கலிபோர்னிய கவுன்டி பகுதிகளை மீண்டும் மூடுவதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அண்மைய முடக்க நிலை தளர்வு அமெரிக்காவில் வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிப்பதற்கு காரணமாகியுள்ளது.

 

Tue, 06/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை