மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பலம் மிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

யாழ். மாவட்ட சு.க வேட்பாளர் பவதாரணி தேர்தல் வாக்குறுதி

மக்களின் அன்றாடத் தேவைகள் மற்றும் மக்களின் அடிப்படை அபிலாஷைகள் குறித்த தகவல்களை அறிந்து அவற்றை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்து எடுத்துக் கூறக்கூடிய பலம் மிக்கதொரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பாக எனது அழுத்தத்தை மக்கள் சார்பாக ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் முன் வைப்பேன். இதுவே எனது தேர்தல்  உறுதிமொழி என யாழ். மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் பவதாரணி இராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு பகுதியில் மட்டுமல்லாது இலங்கையில் எந்தப் பகுதிகளில் வாழ்ந்தாலும் மக்கள் தமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றி உயர்ந்த வாழ்க்கை வாழக்கூடிய சூழல் உருவாக வேண்டும். ஆனால் இன்று நாட்டில் அத்தகையதொரு சூழ்நிலை இல்லை.

ஒரு பிரிவினர் மிகவும் உயர்ந்த நிலையிலும் ஏனையோர் மிகவும் வறுமைப்பட்ட நிலையில் வாழும் தன்மையை பார்க்கின்றோம். இதனை நாங்கள் மாற்றியமைக்க வேண்டும். எனக்கு அரசியலில் நாட்டம் ஏற்பட்டதற்கு இதுவே பிரதான காரணமாக அமைந்துள்ளது.

ஏனெனில் நான் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சமூக சேவையை நாட்டின் பல பாகங்களிலும் செய்து வருகின்றேன். அப்போது என்னால் உணர கூடிய ஒரு விடயமாக இது இருந்தது. அதாவது வாழ்க்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் மக்களில் 50 சதவீத மானவர்களுக்கு மேலாக வாழ்கின்றனர்.இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைக்க வேண்டும்.

அவர்கள் தொடர்ந்தும் இத்தகைய அவல வாழ்க்கையை வாழ முடியாது. அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் அரசாங்கம் ஊடாக ஒரு ஆணையைப் பெற்று பலம் இருக்க வேண்டும்.எனவேதான் என்னை தானாகவே தேடி வந்த அரசியலை நான் ஏற்றுக்கொண்டேன்.அரசியலில் வேறு எந்த நோக்கமும் எனக்குக் கிடையாது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இந்நாட்டில் வாழ்கின்ற சகலருமே ஒரு சமநிலையான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்காக நான் நிச்சயமாக பாடுபடுவேன் என்றார்.

ரி.விரூஷன்

Wed, 06/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை