கொரோனா வைரஸிற்கான மாற்று வீரர்களை அனுமதிக்க ஐ.சி.சி ஆய்வு

கொரோனா வைரஸிற்கான மாற்று வீரர்களை டெஸ்ட் போட்டிகளில் அனுமதிப்பது தொடரில், ஐ.சி.சி ஆய்வு மேற்கொண்டு வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் விஷேட திட்டங்களுக்கான இயக்குனர் ஸ்டீவ் எல்வேர்த்தி குறிப்பிட்டிருக்கின்றார்.

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை மாதம் 08ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் போட்டிகள் உயிரியல் பாதுகாப்பு வலயங்களாக மாற்றப்பட்ட கிரிக்கெட் மைதானங்களில் பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ளன.

இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அணியொன்று தொடரின் போட்டிகளில் தமது வீரர் ஒருவர் வைரஸ் தொற்று அறிகுறிகளை காட்டும் போது அவரினை பிரதியீடு செய்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஐ.சி.சி. இடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தது. இந்த வேண்டுகோளினையே ஐ.சி.சி. பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அணியொன்று பிரதியீட்டு வீரர்களை அனுமதிக்க வேண்டும் எனில், குறித்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர் ஒருவர் தலை உபாதையொன்றினை எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆனால், உலகினை உலுக்கியிருக்கும் கொரோனா வைரஸின் ஆபத்து தொடர்ந்தும் காணப்படுவதன் காரணமாகவே, ஐ.சி.சி. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட வீரர்களை பிரதியீடு செய்வது தொடர்பிலும் ஆலோசிப்பதாக கூறப்படுகின்றது.

”கொரோனா வைரஸிற்கான பிரதியீட்டு வீரர்கள் பற்றி ஐ.சி.சி. கலந்துரையாடுகின்றது.”

”நான் இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் இடம்பெறுவதனை அவதானித்துள்ளேன். எனவே, எங்களுக்கு ஒருநாள், ரி 20 போட்டிகள் தவிர்த்து குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் வீரர்களை மாற்றிக் கொள்ள அனுமதி அளிக்க எதிர்பார்க்கின்றேன்” என ஸ்டீவ் எல்வேர்த்தி குறிப்பிட்டார்.

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடரில் வீரர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியது உறுதி செய்யப்பட்டால், குறித்த வீரரினை மைதானத்தினை விட்டு வெளியேற்றி அவரின் உடல்நிலையினை முகாமைத்துவம் செய்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்து வருவதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் அதிகாரி குறிப்பிட்டிருக்கின்றார்.

மறுமுனையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய வீரர் மற்றுமொரு வீரருடனும் தொடர்பினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. எனவே, தொற்று ஏற்பட்ட வீரர் மூலம் மற்றுமொரு வீரருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. எனவே, இப்படியான விடயம் ஒன்று ஏற்படாமல் தடுப்பது தொடர்பிலும் ஆலோசனைகள் நடைபெறுகின்றன.

இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் குழாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இந்த செவ்வாய்க்கிழமை (9) இங்கிலாந்துக்கு பயணமாகின்றனர். உபாதை பிரதியீட்டு வீரர்கள் அடங்கலாக மொத்தம் 25 வீரர்களினை கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் குழாம், இங்கிலாந்தில் 14 நாட்கள் கொண்ட தனிமைப்படுத்தல் முகாம்களில் பங்கெடுத்த பின்னர், மன்செஸ்டர் நகர கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொள்ளவிருக்கின்றது.

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8ஆம் திகதி சௌத்தம்ப்டன் நகரில் நடைபெற்ற பின்னர், எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளும் ஜூலை 16ஆம், 24ஆம் திகதிகளில் மன்செஸ்டர் நகரில் இடம்பெறவிருக்கின்றன. இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து வீரர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் சபை, மேற்கிந்திய தீவுகளை அடுத்து பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் உடனான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றது.

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை