பொது போக்குவரத்துச் சேவை முதல் நாளில் 95 வீதம் வெற்றி

* பஸ்களில் முற்கொடுப்பனவு அட்டை அறிமுகம் செய்யவும் திட்டம்

* Low floor பஸ்களை இறக்குமதி செய்ய தீர்மானம்

ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் நேற்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் நேற்றைய தினம் 95 வீத வெற்றியடைந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றி சேவைகளை நடத்தியதுடன் ஒரு சில இடங்களில் அவை முறையாக பின்பற்றப்படவில்லையென்றும் அவ்வாறு செயற்பட்டவர்கள் தொடர்பில் கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக ஆசனங்களுக்கமையவே பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்ந்தும் நடைமுறையிலிருக்குமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

நாட்டில் பெரும்பாலும் நேற்றைய தினம் பொதுப் போக்குவரத்து சேவைகள் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றன.அந்தவகையில் நூற்றுக்கு 95 வீதமாக சேவைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.ஒரு சில பகுதிகளில் ஆசனங்களுக்கு மேல் அதிகமாக பயணிகள் நின்று கொண்டும் பஸ்களில் பயணித்தமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

ரயில் போக்குவரத்து சேவைகளும் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றதுடன் ரயிலில் ஆசனங்களின் எண்ணிக்கைகளுக்கமைய பிரயாணிகளை ஏற்றிச் செல்வதில் சில அசௌகரியங்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது.

தினமும் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் ரயிலில் பயணிக்கும் நிலையில் 25,000 ஆசனங்களே ரயில்களில் காணப்படுகின்றன.

அதற்கிணங்க சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதுடன் அதிகளவு பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் ஆக்கபூர்வமான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது அவசியமாகும்.

அவ்வாறு அது சாத்தியப்படாத நிலையில் விசேட பஸ் சேவைகள் மூலம் பிரயாணிகளின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க நேரிடும்.

அதேவேளை, பொதுப் போக்குவரத்துச் சேவைக்கு இனி தரமான வசதிகளைக் கொண்ட பஸ்களை (Low floor buses) மட்டுமே இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தரமான வசதிகளைக் கொண்ட பஸ்களை இறக்குமதி செய்வதற்காக அரச வங்கிகள் மூலம் சலுகை வட்டியுடன் கடன்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி விசேட கடன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு 80 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

காலையில் அலுவலகங்களுக்கு பயணிக்கும் மக்களின் போக்குவரத்து வசதிகளை கவனத்திற்கொண்டு அலுவலக நேர ங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தனியார் துறை நிறுவனங்களை 10 மணிக்கு திறப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அரசாங்க நிறுவனங்களை இரண்டு கட்டங்களாக ஆரம்பிப்பது தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

அதேவேளை எதிர்வரும் இரண்டு மாதங்களில் பொதுப் போக்குவரத்து பஸ்களில் முற்கொடுப்பனவு கட்டண அட்டைகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அது முறையாக நடைமுறைப்படுத்தப்படும் போது தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு மேலதிக கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை