உலக கொரோனா தொற்று 7 மில்லியனைத் தாண்டியது

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 7 மில்லியனைத் தாண்டியுள்ளதோடு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 403,338 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் முதல் முறை அடையாளம் காணப்பட்ட இந்த நோய் தற்போது 210க்கும் அதிகமான நாடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் பரவியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸினால் அமெரிக்காவில் மேலும் 691 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் ஜோன் ஹொப்கின்ஸன் பல்கலைக்கழக தரவுகளின்படி அமெரிக்காவில் ஒரு வாரத்தில் பதிவான குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கையாக இது இருந்தது.

அமெரிக்காவில் இதுவரை 1,938,742 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 110,482 பேர் உயிரிழந்துள்ளனர். இது சர்வதேச அளவில் ஒப்பிடுகையில் மிக அதிக நோய்த் தொற்று மற்றும் உயிரிழப்பாகும்.

எனினும் மொத்த மக்கள் தொகை அடிப்படையில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் உயிரிழப்பு வீதம் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் நடுப்பகுதியில் அமெரிக்காவில் நாள்தோறும் சுமார் 3,000 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவான நிலையில் தற்போது 1,000க்கும் குறைவாக வீழ்ச்சி கண்டிருப்பதோடு 20,000க்கும் குறைவான நோய்த் தொற்று சம்பவங்களாக காணப்படுகிறது.

எனினும் பொலிஸ் ஒடுக்கும்முறை மற்றும் இனவாதத்திற்கு எதிராக அமெரிக்காவில் தற்போது இடம்பெற்று வரும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதன்படி உலகில் வைரஸ் தொற்று பாதிப்பின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமான சம்பவங்கள் ஐந்து நாடுகளிலேயே பதிவாகியுள்ளன.

அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் சுமார் 700,000 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு ரஷ்யா (467,073), பிரிட்டன் (287,624) மற்றும் இந்தியாவில் (257,486) அதிக நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

எனினும் அமெரிக்கா அண்மைக் காலத்தில் தனது சோதனைத் திறனை அதிகரித்தபோதும் இந்த நாடுகளில் போதுமான சோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்த எண்ணிக்கை கூறப்படுவதை விடவும் பலமடங்காக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் மிகக் குறைவாகவே சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வைரஸ் தொற்று சம்பவங்கள் அதிகரித்தபோதும் வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெரும்பாலானவர்கள் சிறிய அளவான நோய் அறிகுறிகளுடன் அதில் இருந்து குணமடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோரில் 15 வீதத்திற்கும் அதிகமானோர் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். மறுபுறம் ஆபிரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,80,000 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஆபிரிக்காவின் நோய் தடுப்பு மையம் , “ 54 ஆபிரிக்க நாடுகளில் கொரோன தொற்று பரவலாக அதிகரித்து வருகிறது. ஆபிரிக்க நாடுகளில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,83,474 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5,000க்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் ஆபிரிக்காவில் கொடுமையான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை முன்னரே தெரிவித்திருந்தது. எனினும் கொரோனா பரவலை தடுக்க ஆபிரிக்க நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதேவேளை பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் தவிக்கும் நிலை ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதுவரை 2,067 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை