கருணாவிடம் சி.ஐ.டி 7 மணிநேர விசாரணை

- இராணுவத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை
- சில ஊடகங்களினாலேயே இது சர்ச்சையானது
- அரசுக்கு சிங்கள மக்களின் வாக்கினை குறைக்க சதி

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சுமார் ஏழு மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் நேற்று முற்பகல் 11 மணிக்கு வாக்குமூலம் பெறும் நடவடிக்ைக ஆரம்பிக்கப்பட்டதாகவும் திணைக்கள உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

அம்பாறை பகுதியில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த கருணா அம்மான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலை யில் அது தொடர்பில் நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளது.

மேற்படி கூட்டத்தில் தான் கொரோனாவை விட பயங்கரமானவன் என்றும் ஒரே இரவில் இரண்டாயிரம், மூவாயிரம் இராணுவத்தினரை படுகொலை செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த சில தினங்களாக அது தொடர்பில் நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. பல்வேறு தரப்பினரும் அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

அதேவேளை நேற்றைய தினம் வாக்குமூலம் வழங்கிய பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த கருணா அம்மான் இந்த சர்ச்சை சில ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்டதாகும்.

நான் இந்த நாட்டு மக்களை நேசிக்கின்றேன். இனவாதம் அல்லது குழப்பங்கள் இல்லாதவாறு நாம் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

அன்று நடந்தவொன்று நான் அரசியல் மேடையில் ஞாபகப்படுத்தினேன். அதனை பூதாகாரமாக்குவது பெரிய விடயமாக எடுத்துக்கொள்வது சிறந்ததல்ல.

தற்போதைய அரசாங்கத்திற்கு சிங்கள மக்களின் வாக்குகளை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயச்சி இது. நாம் தனி தமிழ் கட்சியாக தேர்தலில் போட்டியிடுகின்றோம். வேறெந்த அரசியல் கட்சிக்கோ அல்லது மதத் தலைவர்களுக்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் எதனையும் நாம் செய்யமாட்டோம்.

அதேபோன்று இராணுவத்தினரை நான் ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவதுமில்லை. அவர்கள் நாட்டு மக்களை மீட்பதற்காக தம்மை அர்ப்பணித்தார்கள். அதனால் நான் அவர்களை மதிக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

கருணா அம்மான் நேற்றைய தினம் கொழுபிலுள்ள அவரது இல்லத்திருந்தே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களமானது மேற்படி அவரது கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்க வருமாறு கடந்த 23ம் திகதி கருணா அம்மானுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

எனினும் அன்றைய தினம் அவர் சுகவீனம் காரணமாக வாக்குமூலம் வழங்குவதற்கு சமுகமளிக்க முடியாது என அவரது சட்டத்தரணி ஊடாக திணைக்களத்திற்கு அறிவித்திருந்தார்.

அந் நிலையில் அவரது கூற்று தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த குழு கிழக்கு மாகாணத்திற்குச் சென்று சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

அதேவேளை மேற்படி பொலிஸ் குழுவானது கருணா அம்மான் மேற்படி கருத்தை தெரிவித்த அரசியல் கூட்டத்தை ஏற்பாடு செய்த நபர்களிடமும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக அவர் தெரிவித்த கூற்று தொடர்பான இறுவெட்டையும் தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள குற்றத்தடுப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்றைய வாக்குமூலத்தையடுத்து அது தொடர்பில் கருத்து தெரிவித்த குற்றத் தடுப்பு திணைக்களத்தின் உயரதிகாரி மீண்டும் எதிர்காலத்தில் கருணா அம்மானிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கருணா அம்மானின் மேற்படி சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடமும் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 06/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை