கடல் வழியாக தந்தை, மகளை அழைத்து வர உதவிய 6 பேர் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலைமன்னாருக்கு தந்தை மற்றும் மகள்  வந்த நிலையில், அவர்களை அழைத்து வந்த மற்றும் உதவினார்கள் எனும் சந்தேகத்தில் 06 பேர், புலனாய்வுத்துறை அதிகாரிகளினால்   நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலைமன்னாருக்கு வந்த தந்தை மற்றும் மகள்  மடு பொலிஸ் நிலையத்தில்   சரணடைந்த நிலையில், குறித்த இருவரும் கடந்த  செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு, புனானை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த இருவர் எவ்வாறு மன்னாருக்கு வந்தார்கள் என, அரச புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் படகு மூலம் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர   உதவி மேற்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் பேசாலை மற்றும் வங்காலை பகுதிகளைச் சேர்ந்த 06 பேரை இராணுவத்தின் உதவியுடன்   புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த இருவரையும் அழைத்து வர பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் படகின் வெளி இணைப்பு இயந்திரம் போன்றவற்றை பொலிஸார் துள்ளுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் குறூப்  நிருபர் – றொசேரியன் லம்பேர்ட்)

Sun, 06/07/2020 - 17:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை