பாசிலோனாவுக்கு 6.7 மில். யூரோக்களை செலுத்த நெய்மாருக்கு உத்தரவு

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழக முன்கள வீரர் நெய்மார் தனது முன்னாள் கழகமான பாசிலோனா கழகத்திற்கு 6.7 மில்லியன் யூரோக்களை செலுத்தும்படி ஸ்பெயின் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

2017 ஓகஸ்ட் மாதம் பாசிலோனாவை விட்டு வெளியேறிய பிரேசில் தேசிய அணி வீரரான நெய்மார், அந்தக் கழகம் மேலதிக கொடுப்பனவுகளாக தமக்கு 43.6 மில்லியன் யூரோ செலுத்த வேண்டி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

வெள்ளிக்கிழமை (19) வழங்கப்பட்ட தீர்ப்பு லா லிகா கழகமான பாசிலோனாவுக்கு சாதகமாக அமைந்தது. எனவே, தமது மேலதிகக் கொடுப்பனவைக் கோரி வழக்குத் தொடுத்த 28 வயதான நெய்மாருக்கு இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கும் பாசிலோனா கழகம் தமது நியாயமான நலன்களை தொடர்ந்து உறுதியாக பாதுகாப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு 222 மில்லியன் யூரோவுக்கு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்திற்கு சென்ற பின் தமக்கு சேர வேண்டிய தொகையை செலுத்த பாசிலோனா மறுத்த நிலையில் அது பற்றி அவர் சர்வதேச கால்பந்து சம்மேளத்திடமும் முறையிட்டார்.

நெய்மார் கோரும் தொகையை வழங்க மறுத்தது மாத்திரம் அன்றி 2016 இல் அவருடன் செய்து கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தத்தின்போது அவருக்கு வழங்கப்பட்ட 8 மில்லியன் பவுண் தொகையை திருப்பித் தரும்படி கோரி பாசிலோனா கழகம் சட்டரீதியான நடவடிக்கை எடுத்தது.

இது பற்றி சர்வதேச கால்பந்து சம்மேளனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு, அதனை நீதிமன்றத்திடம் விட்டுவிடுவதாக தெரிவித்தது.

கடந்த 2013 ஆம் ஆண்டு பாசிலோனாவில் இணைந்த நெய்மார் 2016 இல் அந்த அணியுடன் ஐந்து ஆண்டுகள் புதிய ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட்ட நிலையிலேயே பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்குத் தாவினார்.

பாசிலோனா மற்றும் நெய்மார் இடையே நிதிப் பிரிச்சினை நீடித்தபோதும் நெய்மார் மீண்டும் பாசிலோனாவில் இணைவது பற்றி தொடர்ந்தும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன.

Mon, 06/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை