அமெரிக்காவில் கொரோனா தொற்று சம்பவங்கள் 2 மில்லியனை எட்டியது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 மில்லியனை எட்டியுள்ளது.

ஜோன் ஹொப்கின்ஸன் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி அமெரிக்கா மற்றொரு உச்சத்தை எட்டியிருப்பதோடு வைரஸ் தொற்றினால் அந்நாட்டில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 112,900 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி வரும் செப்டெம்பர் மாதமாகும்போது அமெரிக்காவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200,000ஐ எட்ட வாய்ப்பு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி ஒரு மில்லியனை எட்டியது. அது தொடக்கம் நாள்தோறும் 20,000க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் 21 மாநிலங்களில் புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டன. எனினும் அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு எதிரான முடக்க நிலை தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பி வருகின்றனர். அங்கு இடம்பெற்று வரும் இனவாதத்திற்கு எதிரான போராட்டங்கள் வைரஸ் பரவலை தீவிரப்படுத்தும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் நோய்த் தொற்று பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே போஸ்டன், டலஸ் ஆகிய நகர நிர்வாகங்களும் நியூயோர்க் மாநில நிர்வாகமும் அத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் 7.4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு இதுவரை 419,320 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயிலிருந்து குணமடைந்தவர் எண்ணிக்கை 3.7 மில்லியனுக்கு அதிகமாகும்.

Fri, 06/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை