20க்கு 20 உலகக் கிண்ணத்தை பிற்போட சங்கக்கார கோரிக்கை

அவுஸ்திரேலியாவில் 20க்கு20 உலகக் கிண்ணம் இந்த வருடம் நடப்பது சந்தேகம் எனவும், குறித்த தொடரை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பது நல்லது எனவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

16 அணிகளுக்கு இடையிலான 7ஆவது 20க்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகக் கிண்ணப் போட்டிகள் உரிய தினத்தில் நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் 20க்கு20 உலகக் கிண்ணத்தை நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, இந்தியாவின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியுடன் அண்மையில் இடம்பெற்ற நேர்காணலில் 20க்கு20 உலகக் கிண்ணம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை குமார் சங்கக்கார வெளிப்படுத்தியிருந்தார். இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

”கொரோனாவை சுற்றி உள்ள பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொடர்பில் புதிய கண்டுபிடிப்புகளும், புதிய தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

எனவே, எதிர்வரும் காலங்களில் அந்த வைரஸின் உண்மையான நிலைமையை நாங்கள் முதலில் கண்டறிய வேண்டும்.

இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 20க்கு20 உலகக் கிண்ணத் தொடரை ரத்து செய்வதை தவிர வேறு வழி இல்லை. இத்தொடரை மற்றுமொரு வருடத்துக்கு ஒத்திவைக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் வீரர்கள் மற்றும் இரசிகர்களின் உடல் நலன், பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இந்த வைரஸ் தாக்கத்தினால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் இந்த வைரஸுக்கான பிரத்தியேக மருந்து அல்லது தடுப்பூசியும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

வைரஸை தடுப்பதற்கான வழிமுறைகள் கண்டுபிடிக்கப்படும் வரை இந்த வாழ்க்கையை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தற்போதைய சூழலில் இது அனைவருக்கும் பொதுவான விடயமாக உள்ளது” என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஐ.சி.சியினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் தொடர்பில் சங்கக்கார கருத்து தெரிவிக்கையில்,

ஐ.சி.சி வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் வீரர்களையும், போட்டியையும் கட்டுப்படுத்தப் போகிறது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இது வீரர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். இதனால் கிரிக்கெட் விளையாடுவதை ஒதுக்கி வைக்கவும் தோன்றலாம்.

இதில் அனைவரது உடல் நலன், பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் உடல் நலன் தான் முக்கியமானது. இதன்மூலம் வீரர்கள் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கும், ஒரு கட்டத்தில் போட்டிகளைப் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை அளித்துள்ளது.

காலத்துடன் இவையனைத்து ஒன்றித்துப் போகும் என நம்புகிறேன். அதிலும் குறிப்பாக அந்தந்த நாட்டு அரசாங்கம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது ஐ.சி.சியின் முக்கிய பொறுப்பாக உள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

Fri, 06/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை