அமெரிக்காவில் மீண்டும் தீவிரம் அடையும் ‘கொவிட்–19’ தொற்று

அமெரிக்காவில் நாள்தோறும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 35,900 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய சம்பவங்களுடன் சேர்த்து கிட்டத்தட்ட 2.4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐம்பது மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாகவே கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. இதில் டெக்சாஸ், புளோரிடா மாநிலங்களில் வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 756 பேர் கொவிட்-19க்கு பலியாகிவிட்டதாக பால்டிமோரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் கூறியது. அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் 120,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். நியூயோர்க், நியூஜெர்சி, கனெக்டிகட் போன்ற மாநிலங்களில் மக்கள் வெளியே செல்வதை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தங்களைத் தாங்களே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் ஏற்கனவே குறைந்தது 20 மில்லியன் பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் கணித்துள்ளனர்.

கூறப்படும் எண்ணிக்கையை விடவும் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் 10 மடங்கு அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக நோய் கட்டுப்பாட்டுக்கான மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாகவும் அமெரிக்கா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவில் வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,80,000ஆக அதிகரிக்க கூடும் என்று வொஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை 95 சதவீத அமெரிக்கர்கள் முகக்கவசங்களை அணியும் பட்சத்தில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை 1,46,000ஆக கட்டுப்படுத்த முடியுமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Sat, 06/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை