மெக்சிகோ, பிரேசிலில் கொவிட்-19 நாளாந்த உயிரிழப்பு அதிகரிப்பு

தீவிரம் அடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த லத்தீன் அமெரிக்க நாடுகள் போராடி வரும் சூழலில் பிரேசில் மற்றும் மெக்சிகோ நாடுகளில் நாளாந்தம் உயிரிழப்பு எண்ணிக்கை சாதனை அளவுக்கு அதிகரித்துள்ளது. அந்தப் பிராந்தியத்தில் புதிய முடக்க நிலைகள் மற்றும் ஊரடங்குச் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களில் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகள் எல்லைகளை மீண்டும் திறந்து இயல்பு வாழ்வுக்கு திரும்பி வருகின்றன. எனினும் தென் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள் இந்த வைரஸ் தொற்றின் புதிய மையப்புள்ளியாக மாறியுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 385,000 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோவில் கடந்த புதன்கிழமை முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் 1,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் உயிரிழப்பு 1,000 ஐ தொட்டிருப்பது முதல் முறையாகும். பிரேசிலில் கடந்த புதனன்று 1,349 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக மெக்சிகோவில் இதற்கு முன்னர் பதிவான உயரிய உயிரிழப்பு எண்ணிக்கையை விட அது இருமடங்கானதை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கடந்த புதனன்று புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் மிக அதிகமாக மூவாயிரத்துத் தொள்ளாயிரத்தைத் தாண்டியது.

நாட்டில் உயிரிழந்தோர் பற்றி ஆய்வுசெய்து, அவர்கள் மரணத்துக்குக் வைரஸ் தொற்று காரணமா என்பதைக் கண்டறிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனால் வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அண்மையில் உயர்ந்துவருகிறது.

மெக்ஸிக்கோவில் 101 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 11,729 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் முடக்க நடவடிக்கைகளுக்கு பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றபோதும், பல உள்ளூர் நிர்வாகங்களும் அதனை கடைப்பிடித்து வருகின்றன. நிலைமை மோசமடையும் சூழலில் பாகியா மாநிலத்தின் கணிசமான பிரதேசங்களில் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சிலியின் நிலை குறித்து கவலை வெளியாகியுள்ளது. அங்கு நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து தலைநகர் சன்டியாகோவில் முடக்க நிலை மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

லத்தீன் அமெரிக்காவில் வைரஸ் தொற்று மேலும் தீவிரம் அடைவதைக் காட்டுவதாக, பெருவில் குறைந்தது 20 செய்தியாளர்கள் கொரோனா வைரஸினால் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகவியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பெருவில் வைரஸ் தொற்று உக்கிரமாக உள்ளது. மருத்துவமனைகளுக்கு ஒட்சிசன் சாதனங்கள் தேவைப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைப் பெறுவதற்காக பலரும் வரிசையில் காத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

“எமக்கு இன்னும் ஒட்சிசன் கிடைக்கவில்லை” என்று தலைநகர் லிமாவில் லேடி செவல்லா என்பவர் குறிப்பிட்டுள்ளார். “எல்லாவற்றையும் விட எனது தாயின் நிலை பற்றி நான் கவலைப்படுகிறேன். அவருக்கு அதிக ஒட்சிசன் தேவைப்படுகின்றபோதும் மருத்துவமனையில் அது போதுமாக இல்லை” என்று கூறினார். கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதோடு அங்கு 1.85 மில்லியன் பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 107,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது அங்கு இடம்பெற்று வரும் நிறவெறி மற்றும் பொலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வைரஸ் பரவலை அதிகரிக்கும் அச்சம் உள்ளது.

இந்நிலையில் கொவிட்-19 தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நிடிக்கப்பட வேண்டி இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கு முயற்சிகள் உலகெங்கும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக தடுப்புமருந்து கூட்டணியான கேவி அமைப்புக்காக நிதி சேகரிப்பதற்கு 50க்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பில் கேட்ஸ் போன்ற செல்வாக்கு மிக்க தனி நபர்கள் பங்கேற்ற முக்கிய மாநாடு ஒன்று பிரிட்டனில் நேற்று இடம்பெற்றது.

கேவி மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் சாத்தியமான கொவிட்-–19 தடுப்பு மருந்தை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒன்றை ஆரம்பித்துள்ளது. இது மருந்து உற்பத்தி மற்றும் அதனை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு கொண்டுசேர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் மேம்படுத்தப்பட்டிருக்கும் சாத்தியமான தடுப்பு மருந்து ஒன்று அடுத்த வாரம் பிரேசிலில் 2000 சுகாதார சேவைகள் தன்னார்வலர்களிடம் சோதனையை ஆரம்பிக்கவுள்ளது.

Fri, 06/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை