கொவிட்-19: இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு மலேசியா தடை

கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக மலேசியா, அதன் குடிமக்களை இந்த ஆண்டு இறுதிவரை ஹஜ் யாத்திரை செல்லத் தடை விதித்துள்ளது. சமய விவகாரங்களுக்கான அமைச்சர் ஸுல்கிப்லி முஹமது அல் பக்ரி இதனைத் தெரிவித்தார். புனிதப் பயணிகள் தொடர்ந்து பொறுமையுடன் இருப்பர் என்றும், அரசாங்கத்தின் முடிவை ஏற்றுக்கொள்வர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஒவ்வோர் ஆண்டும் மலேசியாவிலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனிதத் தலங்களான மக்கா, மதீனாவுக்குச் செல்வது வழக்கம். சிலர், அதற்காக மலேசியாவில் 20 ஆண்டுவரை கூடக் காத்திருப்பதுண்டு.

கொவிட்-19 நோய் காரணமாக விமானச் சேவைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவும் கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக ஹஜ், உம்ரா யாத்திரைகளை மறு அறிவிப்பு வரும்வரை நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தது.

தற்போது சவுதி அரேபியாவில் நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், தற்போதைய சூழலில், யாத்திரைகளைத் தள்ளிவைப்பதே சிறந்தது என்று மலேசியா தெரிவித்தது.

கொவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பூசியோ, சிகிச்சை முறையோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை அது சுட்டிக்காட்டியது. இந்த அறிவிப்பால் சுமார் 31,600 மலேசியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல முடியாமல்போயுள்ளது. சில நாட்களுக்கு முன், அண்டை நாடான இந்தோனேசியாவும் ஹஜ் யாத்திரைக்கு இந்த ஆண்டு தடை விதித்தது. அதனால், சுமார் 221,000 இந்தோனேசியர்களின் ஹஜ் யாத்திரை தடைபட்டது.

Sat, 06/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை