கொவிட்-19: மலேரியா மருந்தை தொடர்ந்து சோதிப்பதற்கு முடிவு

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைமுறை தேடலில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து மனிதர்களிடம் தொடர்ந்து சோதித்துப் பார்க்கப்படும் என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 25ஆம் திகதி மருந்தின் பாதுகாப்பு அம்சத்தை மறுஆய்வு செய்வதற்காக, நிறுவனம் அதற்கான சோதனையைத் தற்காலிகமாக நிறுத்தியது.

‘தி லன்செட் மடிகல் ஜெர்னல்’ எனும் சஞ்சிகையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வைரஸ் தொற்று நோயாளிகளிடையே மரணத்தை ஏற்படுத்தும் சாத்தியத்தை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டது.

அதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மனிதர்களிடம் சோதனை மேற்கொள்ளும் மருத்துவமனைகள் அதனைத் தற்காலிகமாக நிறுத்தின.

இருப்பினும், மறுஆய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சோதனைகளை நிறுத்துவதற்கு காரணம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியது.

எனவே, சோதனையில் பங்கேற்கும் 35 நாடுகளில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் சோதனை மீண்டும் தொடரப்படும். நோயாளிகள் 3,500க்கு மேற்பட்டோர் சோதனையில் பங்கெடுக்க முன்வந்துள்ளனர்.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்பது மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் க்ளோரோகுவின் மருந்தைப் போன்றதாகும். முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த மருந்து, கடந்த காலங்களில் வைரஸுக்கு எதிரான மருந்தாகவும் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து குறித்து அளவுக்கு மிஞ்சிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

இதனை கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்புக்கும் பயன்படுத்தலாம் என்ற கருத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் இந்த மருந்து எவ்வாறு வேலை செய்கிறது என்பது தொடர்பாக தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. சீனா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இதுதொடர்பான பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Fri, 06/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை