கொரோனா தொற்றால் பெருவில் 170 பொலிஸ் அதிகாரிகள் மரணம்

பெருவில் பொலிஸ் அதிகாரிகள் 170 பேர் கொவிட்-19 நோயால் உயிரிழந்திருப்பதாக அதன் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்கு நடப்பிலுள்ள 12 வாரங்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவை அமுல்படுத்தும் பணியில் பொலிஸ் அதிகாரிகள் 80,000 பேர் ஈடுபட்டனர். அவர்களில் சுமார் 10,000 அதிகாரிகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

மக்களிடையே பாதுகாப்பு இடைவெளியை உறுதிசெய்வதற்காக அதிகாரிகள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டபோது வைரஸ் தொற்றியதாக நம்பப்படுகிறது. அவர்களில் சுமார் 1,000 பேருக்கு அறிகுறி ஏதும் தென்படவில்லை.

அதிகாரிகளுக்கு வைரஸ் தொற்றுவதைத் தவிர்க்கும் முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையிலும், பாதிப்பு நேர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.

வயது, நாட்பட்ட நோய் பாதிப்பு ஆகிய காரணங்களின் அடிப்படையில், வைரஸ் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பொலிஸ் அதிகாரிகள் 4,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் கட்டாயத் தனிமைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்காவில் பிரேசிலுக்கு அடுத்து பெருவில், மிக மோசமான நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு, 208,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது. 6,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Sat, 06/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை