ஒரே நாளில் 1,262 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 1,262 பேர் உயிரிழந்து புதிதாக 28,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸின் மையப்புள்ளியாக மாறி இருக்கும் பிரேசிலில் உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை மீறி முடக்க நிலையை தளர்த்தி வரும் சூழலிலேயே அந்நாட்டில் வைரஸ் பாதிப்பு மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

இதன்படி அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் கொரோனா வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 555,383 ஆக அதிகரித்துள்ளது. அங்கு உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 31,199 ஆக அதிகரித்துள்ளது. இது உலகில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இத்தாலிக்கு அடுத்து அதிக உயிரிழப்பு எண்ணிக்கையாகும். எனினும் 210 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரேசிலில் போதிய அளவு சோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் அங்கு கூறப்படுவதை விடவும் நோய்ப் பாதிப்பு எண்ணிக்கை 15 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதில் சவோ போலே மாநிலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 120,000 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு சுமார் 8,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6.4 மில்லியனைத் தாண்டி இருப்பதோடு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 382,822 ஆக அதிகரித்துள்ளது.

Thu, 06/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை