ரூ. 1000; அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இறுதி முடிவுகள் எட்டப்படும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம் உயர்வு தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அடுத்தகட்ட பேச்சவார்த்தையின்போது இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும் மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று அலரிமாளிகையில் கடந்த வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. பெருந்தோட்டதுறையின் முக்கியஸ்தர்கள், பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரன, இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் நிதிச் செயலாளர் ரமேஸ்வரன் மற்றும் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் பலர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இச்சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

இது தொடர்பான இறுதிக்கட்ட தீர்மானம் பிரதமருடனான அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தையின்போது தெரியவரும்.

1000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக்ககொடுப்பதே எங்களின் நோக்கமாகும். எனினும் அதற்கு அரசாங்கம் மானியம் வழங்க முன்வரவேண்டும் என கம்பனி சார்பில் கோரப்பட்டது. அதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான திகதி தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

(தலவாக்கலை குறூப் நிருபர்)

Sat, 06/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை