கொரோனா வைரசுக்கு எதிரான போரின் அடுத்த கட்டத்தில் அமெரிக்கா இருக்கிறது

கொரோனா வைரசுக்கு எதிரான போரின் அடுத்த கட்டத்தில் அமெரிக்கா இருப்பதாக டிரம்ப் கூறினார்.

அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 12 இலட்சத்தை கடந்து வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இதே போன்று பலியானவர்களின் எண்ணிக்கையும் 72 ஆயிரத்தை தாண்டி விட்டது.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம்  என்-95 முக கவசங்களை தயாரிக்கிற  பீனிக்சின் ஹனிவெல் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு சென்று பார்வையிட்டார். அங்கு அதன் பணியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு குறைந்து வருகிறது. நாம் இப்போது கொரோனா வைரசுக்கு எதிரான போரின் அடுத்த கட்டத்தில் உள்ளோம். இது மிகவும் பாதுகாப்பான கட்டம். அமெரிக்கா படிப்படியாக திறக்கப்படுகிறது. நமது மக்களின் ஆழமான அர்ப்பணிப்புக்கு நன்றி.

அமெரிக்கா கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்கு முன் விடுதலை பெற்றது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் நமது சுதந்திரத்தை வெளிநாட்டினருக்கு வழங்க அரசியல்வாதிகள் அனுமதித்தனர். ஆனால் நாங்கள் அதை திரும்ப எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அதை திரும்ப எடுத்து வருகிறோம். நீங்கள் இப்போது வேலை வாய்ப்பு பெற்றுள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கையை பாருங்கள். அது தெரியும்.

எங்கள் நிர்வாகம் 2 எளிய விதிகளில் நம்பிக்கை வைத்திருக்கிறது. ஒன்று  அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும்  மற்றொன்று   அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பைத் தர வேண்டும் இதுதான் அந்த 2 விதிகள். நமது நாட்டின் மக்கள் போர்வீரர்கள். உங்கள் உதவியுடன் நாங்கள் கொரோனா வைரசை வீழ்த்தி வெற்றி காண்போம். நமது எதிர்காலத்தை பெரிதாக உருவாக்குவோம். அமெரிக்க இதயங்களுக்கு  அமெரிக்க கைகளுக்கு  அமெரிக்க ஆன்மாக்களுக்கு பெருமை சேரட்டும்.

நீங்கள் நல்ல தரமான முக கவசங்களை தயாரிக்கிறீர்கள். மற்ற நாடுகளைப் போல் மோசமான முக கவசங்கள் இல்லை. இதைப்போன்று நல்ல நிறுவனம் இல்லை. துணிச்சல் நிறைந்த நமது டாக்டர்கள்  தாதிகள்  கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிடுகையில் அவர்களை பாதுகாக்க இந்த கவசங்கள் பயன் படுகின்றன. 150 தொழிலாளர்கள் இரவு பகலாக 3 ஷிப்டுகளில் தினமும் பணிபுரிகிறீர்கள். வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறீர்கள். நீங்கள் செய்ததை எண்ணிப்பாருங்கள். நீங்கள் இந்த நம்ப முடியாத தொழில் துறையின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இது மிகப்பெரிய அணி திரட்டல் ஆகும். ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியை நம்புவது கடினம். ஆனால் அது ஒரு மோசமான எதிரி.

உங்களுக்கு முன் இருந்த தலைமுறை தேசபக்தர்களைப் போலவே இந்த தொழில் நிறுவனத்தின் தொழிலாளர்களும் நமது தேசத்தை பாதுகாப்பதற்கும்  ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும்  அவர்களின் இதயத்தையும்  ஆன்மாவையும் ஊற்றுகிறார்கள்.

முன்னதாக டிரம்ப்  பூர்விக அமெரிக்கர்களுடன் ஒரு வட்டமேசை கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது அவர் கொரோனா வைரசை கடுமையான எதிரி என வர்ணித்தார். அதே நேரத்தில் நாம் அந்த எதிரியை வெற்றி கொள்வோம் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசும்போது  “இது வரை வேறு எந்த அரசும் செய்திராத வகையில்  பூர்வீக அமெரிக்க குடும்பங்கள் மற்றும் பழங்குடியினர் வாழ்வை நாங்கள் மேம்படுத்துகிறோம்” என குறிப்பிட்டார்.

மேலும்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில்  பிரான்ஸ்  இத்தாலி  ஸ்பெயின்  நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா உதவுவதாகவும் கூறினார்.

Fri, 05/08/2020 - 13:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை