வெளிநாட்டு நிதி உதவிகள் கிடைக்கவில்லை

வெளிநாட்டு நிதி உதவிகள் கிடைக்கவில்லை-PM Tells No Foreign Fund Received

கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பில்  நிதி ரீதியாக நாட்டுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கவில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அலரிமாளிகையில் நடைபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ள்ளான முதலாவது நபர் இனங்காணப்பட்டதிலிருந்து வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள்,நோயை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

வெளிநாட்டு உதவிகள் கிடைத்தமை மற்றும் செலவு செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகவும் அது தொடர்பில் தெளிவுபடுத்துவது அவசியமென்றும் இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு உதவிகள் தொடர்பில் சரியான தகவல்களை  நிதியமைச்சின் செயலாளராலேயே வழங்க முடியுமென்றும் அதற்கான சந்தர்ப்பத்தையும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவு க்குப் பெற்றுக்கொடுத்தார்.

இதன்போது விளக்கமளித்த நிதியமைச்சின் செயலாளர்,

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு உலக வங்கி 127 மில்லியன் டொலரை உதவியாக பெற்றுக்கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் இதுவரை அந்த நிதி நாட்டுக்கு கிடைக்கவில்லை என்றும் விரைவில் அந்த நிதி கிடைக்கலாம் என்றும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான செலவுகளை நிவர்த்தி செய்வதற்கு அந்த நிதி பெற்றுக்கொள்ளப்படும் என்றும் இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு உதவிகளாக பொருட்கள் ரீதியான உதவிகள் சுகாதார அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழிலுக்காக கொழும்புக்கு வந்து கொரோனா  வைரஸ் நிலைமை காரணமாக தமது வீடுகளுக்கு செல்ல முடியாமல் கொழும்பில் தங்கியுள்ள வடக்கு,, கிழக்கு மாகாண மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்கு செல்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் நேற்றைய பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட வடக்கு, கிழக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதேவேளை, வடக்கு, கிழக்கில் வாழும் பெருமளவு மக்கள் அன்றாட தொழில்களில் ஈடுபடுபவர்கள் என்றும் அவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டுமென்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர்;

வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 53,000 பேர் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசிப்பதுடன் அவர்களை படிப்படியாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்புவற்கான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென இதன்போது பெரும்பாலான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைகளை முன்வைத்ததுடன் அதற்காக தமது ஒருமாத ஓய்வூதிய கொடுப்பனவை நன்கொடையாக வழங்குவதற்கும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக வீடுகளில் தங்கியுள்ள பிள்ளைகளின் கேள்விகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டதுடன் தொடர்ந்தும் அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டுமெறும் கேட்டுக் கொண்டனர்.

நேற்றைய இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், பிரதமரிடம் சில யோசனைகள் அடங்கிய மகஜரை கையளித்தார்.

கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப தொடர்பிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு ஆலோசனைகளை இங்கு முன்வைத்தனர்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மேற்படி யோசனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பொருத்தமான யோசனைகளை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்தார்.

நேற்றைய இந்த பேச்சுவார்த்தையில் பொது ஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.

பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள், சுகாதாரத்துறை முக்கியஸ்தர்கள், பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள், உள்ளிட்ட கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 05/05/2020 - 15:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை