சீனாவின் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து ஹொங்கொங்கில் பெரும் ஆர்ப்பாட்டம்

சீனா அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய பாதுகாப்புச் சட்டத்தை அடுத்து ஹொங்கொங்கில் நேற்று இடம்பெற்ற முதலாவது ஜனநாயக ஆதரவு ஆர்ப்பட்டத்தின்போது பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டனர்.

நகர மையத்தை நோக்கி நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர்.

சீனாவின் சர்ச்சைக்குரிய திட்டத்தை விமர்சித்து உலகெங்கும் 200 சிரேஷ் அரசியல்வாதிகள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது நகரின் சுயாட்சி, நீதியின் ஆட்சி மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹொங்கொங் சட்டமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படும் இந்த சட்டத்தில் பிரிவினைவாதிகள் மற்றும் தேசவிரோத செயல்களை தடுப்பதற்கான கூடுதல் சட்ட அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும் வெளிநாட்டு தலையீடுகள், பயங்கரவாதத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு எதிரான அம்சங்களும் இந்த சட்டமூலத்தில் இடம்பெற்றுள்ளன.

சீன ஆதரவு கொண்ட ஹொங்கொங் தலைவர் கர்ரி லாம் இந்த சட்டமூலத்திற்கு முழு ஆதரவை வெளியிட்டிருப்பதோடு நகரின் சுதந்திரம் மாற்றம் இன்றி நீடிக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் ஹொங்கொங்கின் பரபரப்பான கோஸ்வே பே மற்றும் வான் சாய் மாவட்டங்களில் நேற்று ஒன்றுதிரண்ட ஆர்ப்பட்டக்காரர்கள் அரசுக்கு எதிரான கோசங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி நின்றனர்.

கொவிட்-19 பரவலை தடுப்பதற்காக முகக் கவசங்களுடன் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கழகம் அடக்கும் பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டதொடு மிளகு திரவத்தை தெளித்தனர்.

சமூக இடைவெளியை பேணும் வகையில் பொது ஒன்று கூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அனுமதியின்றி நடத்தப்படும் ஒன்றுகூடல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் முன்னதாக எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 05/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை