அதாவுல்லாஹ்வுக்கு மாத்திரம் வாய்ப்பு!

இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் சக்திகொண்ட தேசிய நலனிலும் அக்கறைகொண்ட ஒருவரே இலங்கை முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக அமைச்சரவையில் பலமிக்க அமைச்சராக இருக்க வேண்டும். அந்த தகுதியும், அதற்கான வாய்ப்பும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு மட்டுமே உள்ளது என, சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளராக இருந்த, தேசிய காங்கிரசின் பொதுத்தேர்தல் வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

இன்று (23) காலை அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்தகாலங்களில் சிறப்பாக அரசியல் செய்த ஒருவராக நான் தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்வை காண்கிறேன். எப்போதும் தமது செயற்பாடுகள் காரணமாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் வெறுப்பையும், அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பையும் சம்பாதித்து வைத்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர்களோ அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்காரர்களோ எதிர்வரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க எவ்வித வாய்ப்புகளும் இல்லை. அவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள போவதில்லை என கடந்த காலங்களில் அரசின் முக்கியஸ்தர்கள் பல சந்தர்ப்பங்களிலும் அறிவித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசுடன் இணைந்து செல்லும் சந்தர்ப்பங்களிலும் கூட நமது முஸ்லிம் கட்சி தலைவர்கள் அதை விரும்பாது எதிர்ப்பரசியல் செய்து அரசின் எதிர்ப்பை மேலும் சம்பாதித்து வருகிறார்கள். இது சமூகத்திற்கு ஆபத்தான ஒரு விடயம். கடந்த காலங்களில் நாம் விட்ட பிழைகளால் இப்போது கடும் கஷ்டங்களை மட்டுமன்றி மனதுக்கு விரும்பாத பல அனுபவங்களையும் அனுபவித்து வருகிறோம். நமது ஒருவர் அந்த அமைச்சரவையில் இருந்திருந்தால் இப்போது நடக்கும் பல துரதிஷ்ட சம்பவங்கள் நடக்காமல் பாதுகாத்திருக்க முடியும்.

இனிவரும் காலங்களில் அரசின் அபிமானம் பெற்ற ஒருவரான தேசிய காங்கிரசின் தலைவர், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்வை பாராளுமன்றம் அனுப்பி அமைச்சரவையில் நமது பிரதிநிதியாக அமரச்செய்ய அம்பாறை மாவட்ட மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்க முன்வரவேண்டும் என்றார்.

(நூருல் ஹுதா உமர்)

Sat, 05/23/2020 - 11:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை