மின்கம்பம் வீழ்ந்ததில் போக்குவரத்து தடை

ஹட்டன் - காசல்ரீ பிரதான வீதியில், காசல்ரீ  கொலனி பகுதியில் இன்று (18) அதிகாலை மின்கம்பமொன்று முறிந்து வீழ்ந்ததில் இவ்வீதியூடான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் முற்றாக தடைப்பட்டன.

குறித்த மின்கம்பம் வீழ்ந்ததன் காரணமாக ஒஸ்போன், நோட்டன்பிரிஜ், லக்ஸபான உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

மத்திய மலைநாட்டு பகுதியில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து இப்பகுதியில் இன்று அதிகாலை கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது.

காற்று காரணமாக பாரிய மரம் ஒன்று மின் கம்பிகளின் மீது முறிந்து வீழ்ந்துள்ளதனால் இந்த மின்கம்பம் முறிந்து வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளது.

இதனால் இவ்வீதியினுடாக பயணித்த வாகனங்கள், பல மணித்தியாலங்கள் காசல்ரீ பகுதியில் தரித்து நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டன.

மின்கம்பம் முறிந்ததன் காரணமாக பல பகுதிகளுக்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனை சரி செய்வதற்கு மின்சார சபையினருக்கு அறிவித்துள்ளதாக, பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

(ஹட்டன் விசேட  நிருபர் -கே.சுந்தரலிங்கம்)
 

Mon, 05/18/2020 - 11:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை