மட்டு. அரச ஊழியர்களுக்கு முகக்கவசங்கள்

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முகக்கவசங்கள், தொற்று நீக்கிகள் என்பன மாவட்ட செயலாளரிடம் வழங்கப்பட்டன.

இயல்புவாழ்வை மீளக்கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய மட்டக்களப்பில் சகல அரசாங்க சேவைகளும் முழுமையாக செயல்பட்டு வருக்கின்றவேளையில் அரசபணியாளர்களின் பாதுகாப்பிற்கான ஒரு தொகை சுகாதாரப் பொருட்களை இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம்  (11) மாவட்ட செயலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களிடையே கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் நோக்குடன் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கிழக்குப் பிராந்திய விற்பனை முகாமையாளர் பொன்னையா புவனேந்திரனால் இந்த சுகாதாரப் பொருட்கள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த சுகாதார பொருட்களில் 3ஆயிரத்தி 450 முகக் கவசங்கள், 275 கைகளுவும் திரவங்கள், 5 லீட்டர் கொள்ளளவு கொண்ட 20 கலன் தொற்று நீக்கித்திரவங்கள், பதாதைகள் என்பன அடங்கியிருந்தன. இச்சுகாதாரப் பொருட்கள் உடனடியாக சகல பிரதேச செயலகங்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கான பணிப்புரை அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சுகாதாரப் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு காரியாலய நிர்வாக உத்தியோகத்தர் திருமதி பானுமதி கர்ணாகரன், சிரேஷ்ட விற்பனைக் குழுத்த தலைவர் எஸ். ஸ்ரீகரன், மாவட்ட செயலக கணக்காளர் எம். விநோதன், மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன் உட்பட இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்

Tue, 05/12/2020 - 10:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை