அனைத்து சவால்களையும் முறியடிக்க மூவின மக்களும் இணைந்து செயற்படுவது அவசியம்

டாக்டர் டிலக் ராஜபக்ஷ தெரிவிப்பு 

நாடு எதிர்கொள்ள நேர்ந்து உள்ள அனைத்து சவால்களையும் முறியடிக்க மூவின மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம்  என்று வியத்கம அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், வருகின்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இம்மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளருமான வைத்திய கலாநிதி டிலக் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெரமுனவின் நிந்தவூர் செயற்பாட்டாளர் எம். எம். முபாசிரின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை மாலை விசேட இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. இதில் சக வேட்பாளரான சம்மாந்துறையை சேர்ந்த யூ. எல். அஸ்பர், அனைத்து கட்சிகள் ஒன்றியத்தின் தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் அடங்கலான பேராளர்கள் கலந்து கொண்டனர். டிலக் ராஜபக்ஷ தொடர்ந்து பேசியதாவது,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்க்கதரிசனம், தூர நோக்கு, தெளிந்த சிந்தனை ஆகியவற்றுடன் கூடிய நடவடிக்கைகள் காரணமாக சுபீட்சம் நிறைந்த எதிர்கால இலங்கை கண் முன் தெரிகின்றது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் எவ்விதம் எமது தாய் நாடு ஏனைய உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றதோ, அதே போல அனைத்து நல்ல விடயங்களுக்கும் முன்னுதாரணமாக விரைவில் மலரும் என்பதில் சந்தேகம் கிடையாது.

எந்தவொரு யுத்தத்திலும் முதலில் சுட்டு வீழ்த்தப்படுகின்ற பொருளாக உண்மை உள்ளது. இனவாதம் பேசினால் இலகுவாக வாக்கு பெறலாம் என்கிற நப்பாசையுடன் குறுகிய சுய இலாப அரசியல்வாதிகள் உங்கள் முன்னிலைக்கு வருவார்கள். ஆயினும் அவர்களின் பருப்புகள் உங்களிடம் வேக போவது இல்லை.  நாடு எதிர்கொள்ள நேர்ந்து உள்ள அனைத்து சவால்களையும் முறியடிக்க மூவின மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் ஆகும்.

நாவிதன்வெளி தினகரன் நிருபர்

Sat, 05/16/2020 - 10:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை