துணிவும், சிறந்த தலைமைத்துவம் என்பதாலேயே வெற்றி கிடைத்தது

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இன்று 11 வருட பூர்த்தி

துணிவும் சிறந்த தலைமைத்துவமும் வழங்கக்கூடிய தலைவர்களாலேயே நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடிந்ததென முன்னாள் விமானப்படைத் தளபதி, மேல் மாகாண ஆளுநர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி நாட்டை மீட்டெடுப்பதற்காக முப்படைக்கும் சிறந்த வழிகாட்டல்களை வழங்கியதாலேயே 30 வருட கோர யுத்தத்தை வெற்றி கொள்ள முடிந்ததென்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டிலிருந்து முற்றாக பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இன்று 18ஆம் திகதியுடன் பதினொரு வருடங்கள் நிறைவடையும் நிலையில் ஊடகமொன்றுக்கு அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேபோன்று யுத்தத்தை வெற்றி கொண்டதுபோல் சிறந்த தலைமைத்துவத்தையும் வழிகாட்டல்களையும் வழங்க கூடிய தலைவர்கள் தற்போது நாட்டை ஆட்சி செய்யும் நிலையில் நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு படையினருக்கு தைரியமும் ஊக்குவிப்பும் மிக அவசியமாக இருந்தது. அதனை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுத்து தேவையான யுத்த உபகரணங்கள், ஆயுதங்களையும் அன்றைய அரசாங்கம் காலதாமதமின்றி பெற்றுக்கொடுத்தது என்பதை அப்போது படையிலிருந்த உயர் அதிகாரியாக என்னால் கூற முடியும்.

மாவிலாறு சம்பவம் உட்பட பல்வேறு சம்பவங்களை அது தொடர்பில் கூறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையில் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு யுத்த காலம் போன்றே சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி தேவையான நடவடிக்கைகள் ஜனாதிபதியும் பிரதமரும் முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக மேல் மாகாணத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தங்கியிருந்த சுமார் 57,000 மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கிணங்க இதுவரை பத்தாயிரம் பேருக்கு மேல் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர்.

அதேபோன்று குறிப்பாக கொழும்பு மற்றும் கொழும்பு அண்டிய நகர்ப்புறங்களில் வசித்த யாசகர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு அவர்களுக்கான சிறந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தனிமைப்படுத்தல் மற்றும் புனர்வாழ்வுக்கு பின்னர் அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு வருகின்றனர். தகுதியானோருக்கு தொழில் வாய்ப்புகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுவருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 05/18/2020 - 14:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை