கிடைத்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் கட்சிகள் முற்றாக தவறவிட்டன

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை என்பன தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் (4.5.2020 அன்று) ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றை, முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.பிக்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறியமை பெரும் கவலைக்குரிய விடயம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் தெரிவித்துள்ளார்.

ஒரு புறம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீடித்துக் கொண்டிருக்கின்றது. அத்தோடு இன்னும் பல பிரச்சினைகளும் நிலவவே செய்கின்றன. இவ்வாறான சூழலில் பிரதமர் கூட்டிய இக்கூட்டத்தில் கலந்து கொண்டு முஸ்லிம்கள் இக்காலப்பகுதியில் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளை பிரதமரினதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்கு கொண்டு வரக்கிடைத்த இச்சந்தர்ப்பத்தை, இக்கட்சிகள் உதாசீனம் செய்துள்ளன.   இது சமூகம் சார்ந்த எந்தவொரு கட்சியும் செய்யாத, செய்யக்கூடாத விடயமாகும். அதற்கு மாறாக  முஸ்லிம்கள் போன்று பல பிரச்சினைகளை எதிர்நோக்கும் தமிழ் மக்களின் இறுதிப் பாராளுமன்ற பிரதிநிதிகளின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அன்று அங்கு செயற்பட்டவிதம் முன்னுதாரணமாகும்' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் முஸ்லிம்களின் குரல்களாகத் தம்மை  அடையாளப்படுத்திக் கொண்ட கட்சிகள். நாட்டின் தலைவர் அழைக்கும் கூட்டங்களில் அரசியல் பிரதிநிதிகள் பங்குபற்றுவது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பாரம்பரியமாகும். ஆனால் அப்பாரம்பரியம் கூட இங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை. இவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் தாம் சார்ந்த மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளையும் அவர்களது தேவைகளையும் பிரதமரினதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்குகொண்டுவந்திருக்கலாம். அதற்குரிய அரிய வாய்ப்பாகவே இக்கூட்டம் விளங்கியது. தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கொரோனாவினாலோ, சாதாரண காரணங்களினோலோ மரணிக்கும் முஸ்லிம்களின் மையத்துக்களை அடக்குவதில், சரித்திரத்தில் காணாத துன்பங்களையும் தடங்கல்களையும் கண்டும் காணாதோர்போன்று முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் செயலிழந்து கிடப்பது ஆழ்ந்த வேதனையைத்தருகின்றது. விதிவிலக்காக, வெள்ளியன்று வெலிகமையில் இறையடிசேர்ந்த 54 வயது முஸ்லிம் பெண்ணின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதில், வெலிகமையுடன் தொடர்புடைய மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி. அலிஸாஹிர்மௌலானா, வெலிகம நகரசபை தலைவர் ரெஹான் ஜயவிக்ரம மூலம் எடுத்த முயற்சிகளின் பலனாக நிம்மதியாக அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வை பாராட்டப்பட வேண்டிய செய்தியாக குறிப்பிட வேண்டும்.

ஒரு பெரும்பான்மை கட்சிக்குள் முடங்கி, தமக்குரிய அரசியல் சுதந்திரத்தை இழந்திருப்பதைவிட, நடுநிலையில் எதிர்க்கட்சியில் இருந்து இன்னும் 05 வருடங்கள் ஆட்சியில் இருக்கப்போகும் அரசாங்கத்துடன் நெருங்கிசெயலாற்றுவதே முஸ்லிம்கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மை இனங்களின் இன்றைய தந்திரோபாய நிலைப்பாடாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்களின் நல்ல விடயங்களுக்கு ஆதரவு நல்கியும், பாதிப்பான விடயங்களுக்கு ஆட்சேபனைகள் தெரிவித்தும் சுதந்திரமாக செயற்படுவதே கௌரவமான வழி. அந்தவகையில் பிரதமர் 4.5. 2020 அன்று ஒழுங்குசெய்திருந்த கூட்டத்தை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அணுகிய முறைமை முக்கியமானது.

இந்த சூழலில் கட்சி அரசியல் நலன்களுக்கு அப்பால் நாட்டினதும் மக்களதும் நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்படுவதன் மூலம் பெரும்பான்மை மக்களுடனான நல்லுறவை மேலும் மேம்படுத்திக்கொள்ளலாம்.

'எதிரியாக இருந்தாலும் அவர்களுக்கும் நன்மை செய்வதன் மூலம் அவர்களும் நண்பர்களாகலாம்’ என்று அல்குர்ஆன் கூறுவதை இந்த நோன்பு மாதத்திலாவது எமது பிரதிநிதிகள் மறந்திருக்கக்கூடாது. இக்கட்சிகள் சமூகம் சார்ந்த கட்சிகள். சுயாதீனமாக செயற்பட வேண்டிய கட்சிகள். அதனால் பெரும்பான்மை கட்சிகளுக்குள் முடங்கித் தவமிருப்பது ஆரோக்கியமான செயலாக இருக்காது.

Mon, 05/11/2020 - 11:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை